தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களும் நுண்கடன் நிறுவனங்களும் தற்போது அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இது ஒருபுறம் கிராம மற்றும் நகர்ப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை அதிகபடுத்தினாலும், ஒருபுறம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் பல பெண்கள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக பல குடும்ப பெண்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சோக சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. கடனை திரும்ப பெறுவதற்கு சட்டதிட்ட விதிகள் பல நிர்ணயிக்கப்பட்டாலும், அதனை எந்த ஒரு நிதிநிறுவனங்களும் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு சம்பவமாக மயிலாடுதுறையில் ஓர் நிகழ்வு நடந்தேறி உள்ளது.
40 ஆயிரம் கடன்:
மயிலாடுதுறை அருகே நுண்கடன் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த ஊழியர் வற்புறுத்தியதால் விரக்தி அடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த காளி ஊராட்சி அபிராமி தோப்புத்தெருவை சேர்ந்தவர் 36 வயதான மாலதி. இவரது கணவர் 40 வயதான பாஸ்கர். இருவரும் தினக் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாலதி குத்தாலத்தில் உள்ள நுண்கடன் நிதி நிறுவனம் ஒன்றில் 40 ஆயிரம் ரூபாய் குழுக்கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து 9 தவணைகளை சரியாக செலுத்தி வந்துள்ளார்.
தற்கொலை:
இந்த சூழலில் தொடர் மழையின் காரணமாக வேலை இல்லாததால் நுண்கடன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவணைத் தொகையை வசூலிக்க வந்த ஊழியர் சுகந்தன், பணத்தை பெறாமல் செல்ல மாட்டேன் என்று மாலதியின் வீட்டு வாசலிலேயே மாலை வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பணம் செலுத்த முடியாத விரக்தியில் மனமுடைந்த மாலதி, தனது வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, இதுகுறித்து மாலதியின் கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுகந்தனை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து உடற்கூராய்வுக்குப்பின் மாலதியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.