குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் அரசு ஏன் இன்னும் மெளனமாக இருக்கிறது என்றும் தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.


அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.


இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.


நவம்பரில் வெளியான முதல்நிலைத் தேர்வு முடிவுகள்


இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. 


முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. 


இவ்வளவு தாமதம் ஏன்?


இதுகுறித்து தேர்வை எழுதியவர் வேதனை தெரிவித்து வருகின்றனர். தேர்வர்கள் 2022 மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வை எழுதிய நிலையில், 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை. இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


முதன்மைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என ஒட்டுமொத்த தேர்வு செயல்முறை 2 ஆண்டுகளைக் கடக்கவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.




6000 பேருக்கு அரசுப் பணி


இதற்கிடையே மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ’’குரூப் 2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. 80 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும்’’ என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் டிசம்பர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வரை (டிச.9) வெளியாகவில்லை.


இன்னும் ஏன் இந்த மெளனம்?


இதைக் குறிப்பிட்டு தேர்வர்கள் சமூக வலைதளங்களில் தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று ட்ரெண்டாக்கி வருகின்றனர். குறிப்பாக, ’’விடியல் ஆட்சி போட்டி தேர்வு மாணவர்களை ஏமாற்றி விட்டதோ என்ற எண்ணம் எழுகிறது. இன்னும் ஏன் இந்த மெளனம்?






அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த டிசம்பர் மாத முதல் வார உறுதி என்ன ஆயிற்று?’’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசினேன். அவர் கூறும்போது, ’’இன்னும் ஒரு வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தம் முடிந்து விடும் என எதிர்பார்க்கிறேன். முடிந்தவுடனே முடிவுகள் வெளியிடப்பட்டு விடும்’’ என்று தெரிவித்துள்ளார்.