அமீர் (Ameer), சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாயவலை (Maayavalai). இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பருத்திவீரன் பட வெற்றிக்கூட்டணியான அமீர் - யுவன் ஷங்கர் ராஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.


வெளியான டீசர்


இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள இப்படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரத்தில் அமீர் தோன்றுகிறார். பின்னணி இசையும் இந்த டீசருக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


ராம் ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



பருத்தி வீரன் படத்தில் தொடங்கிய அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான மோதல், கடந்த சில வாரங்களாக பேசுபொருளாகி வரும் நிலையில், அமீரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


இயக்கம் டூ நடிப்பு


பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்த அமீர், யோகி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தன் பயணத்தைத் தொடங்கினார்.


வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் எனும் கதாபாத்திரம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில், தற்போது மீண்டும் அதே பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


இப்படத்தின் டீசரை இன்று இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பாடலாசிரியர் சினேகன், நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.


யாசகம் வேண்டாம்.. நான் கேட்பது என் உரிமை


நேற்று பருத்திவீரன் சர்ச்சை குறித்து முதன்முறையாக அமீர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு,


எனது TEAMWORK PRODUCTION HOUSE" நிறுவனத்தின் பெயரில் தணிக்கை செய்யப்பட்ட 'பருத்திவீரன்" திரைப்படத்தை அரசியல் அழுத்தம்" காரணமாகவே ஞானவேல் அவர்களுக்கு தாங்கள் மாற்றிக் கொடுக்கக்கூடிய சூழல் தங்களுக்கு உருவானது என்பதை அன்றைய காலகட்டத்தில் என்னிடம் எடுத்துரைத்தீர்கள். தாங்கள் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை அறிய முடியாத சூழலே அன்றைக்கு எனக்கு இருந்தது.


இருந்த போதும், வேறுவழியின்றி சங்க நிர்வாகிகள் சொன்னதை உண்மையென்று நம்பியே, எனது "பருத்திவீரன்" திரைப்படத்தை நான் வேறொரு நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தேன். பிறிதொரு முறை திரைப்பட வெளியீட்டுக்குப் பின்னர். அன்றைய முதல்வர் அவர்களை, அவரது இல்லத்திலேயே சந்தித்து நடந்த விபரங்களை நான் அவரிடம் எடுத்துச் சொன்னபோது, "தனக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.." என்று அவர் கூறிய பின்புதான் நான் முழுவதுமாக திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தேன் என்பதை இப்போது தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


நேர்காணலில், "படம் வெற்றி பெற்று விட்டது.. அதனால், Studio Green நிறுவனத்தார், அமீருக்கு ஏதாவது நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும், ஞானவேல் அவர்கள் ஏதேனும் பணம் தரவேண்டும்.. என்றும் கூறியிருக்கிறீர்கள். நான் பெற விரும்புவது, "யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..!"என்பதை மீண்டும் மீண்டும் தங்களுக்கும், இப்பிரச்னை சார்ந்தோர்க்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.இறைவன் மிகப் பெரியவன்" எனக் கூறியுள்ளார்.