சரியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு இன்று விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்றார். மகேந்திர தோனிக்கு பிறகு கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றுக்கொண்டார். இதற்கு பிறகு, விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஏறக்குறைய 8 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். இந்த காலக்கட்டத்தில் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் செயல்திறன் மற்றும் புள்ளி விவரங்கள் சிறப்பாக இருந்தது. விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இதில் இந்திய அணி 40 வெற்றிகளைப் பெற்றது.
டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் புள்ளி விவரம் இப்படி...
மேலும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2021 உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்வி உட்பட 17 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளது. மேலும், இவரது தலைமையிலான இந்திய அணி 11 டெஸ்ட் போட்டிகளை டிரா செய்தது. இதன் மூலம் விராட் கோலியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த காலம் சிறப்பாக இருந்ததை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இந்திய அணியின் மிக சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவராக விராட் கோலி ஜொலிக்கிறார்.
மேலும், ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலி இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அடுத்தடுத்து பல சாதனைகளை குவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மண்ணில் கேப்டனாக பல வெற்றிகளைப் பெற்றார் விராட் கோலி. இதை எந்தவொரு இந்திய டெஸ்ட் கேப்டனும் செய்தது இல்லை.
உலகக் கோப்பையில் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி:
இந்நிலையில்தான் கடந்த 2021ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதன்பிறகு, பிசிசிஐ அனுபவ வீரரான ரோஹித் சர்மாவை மூன்று வடிவிலான இந்திய அணியின் கேப்டனாக நியமித்தது. அப்போது முதல் தற்போது வரை இந்திய அணியின் பேட்ஸ்மேனாக விராட் கோலியின் சிறப்பான பார்ம் குறையாமல் தொடர்கிறது. சமீபத்தில், விராட் கோலி 2023 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 2023 உலகக் கோப்பையில் விராட் கோலி 11 போட்டிகளில் விளையாடி 95 சராசரியில் 765 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், உலகக் கோப்பையின் எந்த ஒரு பதிப்பிலும் இந்திய பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாக பதிவாகியது.
விராட் கோலி ஒட்டுமொத்த கேப்டன்சி சாதனை
விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள், டி20 என 213 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, கேப்டனாக தனது வாழ்க்கையில் 135 வெற்றிகளையும் 60 தோல்விகளையும் பெற்றுள்ளார்.
போட்டிகள் | வெற்றி | தோல்வி | ட்ரா | முடிவு இல்லை | வெற்றி% |
213 | 135 | 60 | 11 | 0 | 63.38 |