மயிலாடுதுறை அருகே உள்ள கிராமம் சோழம்பேட்டை. அக்கிராமத்தை சேர்ந்தவர் 31 வயதான சத்யா. இவரது கணவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் சத்யா பள்ளி விடுமுறையை அடுத்து தனது குழந்தையை அழைத்துக் கொண்டு பந்தநல்லூரில் உள்ள அம்மா வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அம்மா வீட்டில் ஒரு வார காலம் தங்குவதற்கு செல்வதால்தான் வீட்டில் வைத்திருந்த மோதிரம், செயின், தோடு, நெக்லஸ், டாலர், செயின் உள்ளிட்ட 22 சவரன் தங்க நகையை வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லாமல் திருட்டுப் போய்விடுமோ என்று எண்ணி, பையில் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த சூழலில், மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது பந்தநல்லூர் வழியாக திருப்பனந்தாள் செல்லும் தமிழ் (பேருந்து எண்:24) என்ற தனியார் பேருந்து வந்துள்ளது. கூட்ட நெரிசலில் அந்த பேருந்தில் சத்யா தனது குழந்தையுடன் ஏறியதும் தனது பையை பார்ததுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த பை (ஹேன்ட் பேக்) திறந்து இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யா, பை உள்ளே பார்த்தார். அப்போது பையில் இருந்த 22 சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதை அடுத்து அவர் கூச்சலிட்டுள்ளார்.
அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக பேருந்து நிலையத்தில் இருந்து காவல்துறையினர், பேருந்தில் இருந்த பயணிகள் யாரையும் கீழே இறங்கவிடாமல் பேருந்தை மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகளை ஒவ்வொருவராக இறங்கச் சொல்லி சோதனை செய்தனர். ஆனால் நகை கிடைக்கவில்லை. தனியார் பேருந்து முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போதும் பேருந்திலும் நகைகள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், பேருந்தின் உள்ளே உள்ள சிசிடிவி கேமராவையும், பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து, போலீசார் நகையை கொள்ளையடித்தவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.