ராஜ்கோட் ஸ்டேடியத்தில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 49.4 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 கே.எல்.ராகுல் தலைமையில் வென்று தொடரை கைப்பற்றியது. இதற்கான கோப்பையை வாங்க ரோஹித் சர்மாவை அழைத்தபோது, அவர் வாங்க மறுத்து கே.எல்.ராகுலை வாங்க சொன்னார். அந்த நேரத்திலும் கே.எல்.ராகுல் ரோகித் சர்மாவை  கோப்பையுடன் சேர்ந்து கையை பிடிக்குமாறு அழைத்தபோது இது உங்களுக்கானது என்று சொல்லி, அருகில் நின்று கொண்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






ஆஸ்திரேலிய தொடரின் முதல் 2 போட்டிகளில் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மா இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் அணிக்கு தலைமை ஏற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்று கொடுத்தார். 






தோல்விக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா:


தோல்விக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “கடந்த 7-8 ஒருநாள் போட்டிகளில் எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. வெவ்வேறு சூழ்நிலைகளிலும், வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவும் நாங்கள் சவால்களை எதிர்கொண்டோம் என்று ரோஹித் சர்மா கூறினார். நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடினோம் என்று நினைக்கிறேன். இன்று எங்களால் வெற்றி பெற முடியாவிட்டாலும், எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.


பும்ராவை புகழ்ந்த இந்திய கேப்டன்: 


ஜஸ்பிரித் பும்ரா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்கிற விதம் எங்களுக்கு நல்ல அறிகுறி. உலகக் கோப்பைக்கான எங்கள் 15 பேர் கொண்ட அணி குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம், நாங்கள் எந்த வித குழப்பத்திலும் இல்லை. ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் விதம் மிகச்சிறப்பு. இதைத் தவிர மற்ற பந்துவீச்சாளரிடம் திறமைக்கு பஞ்சமில்லை. இன்று அவர்களுக்கு சிறப்பாக அமையவில்லை. 


விளையாடிய ப்ளேயிங் 11:


இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா


ஆஸ்திரேலியா அணி: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஜோஷ் ஹேசில்வுட்