கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
கனட நாட்டின் பிரிவினைவாத தலைவரின் கொலை உலக நாடுகள் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த காரணம் கனட நாட்டு பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டு.


உலக நாடுகளை அதிர வைத்த கனடா பிரதமரின் குற்றச்சாட்டு:


ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் இப்போது  விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் அமெரிக்க எடுத்துள்ள நிலைபாடு இந்தியாவுக்கு நெருக்கடி தரும் வகையில் அமைந்துள்ளது.  


அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட உளவுத்தகவல்கள் அடிப்படையில்தான் இந்தியா மீது கனட பிரதமர் குற்றம் சுமத்தியதாக அமெரிக்காவின் மூத்த தூதர் டேவிட் கோஹன் தெரிவித்திருந்தார். இதன் மூலம், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதரவு யாருக்கு என்பது தெளிவாகிறது.


இம்மாதிரியான சூழலில், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை இன்று சந்திக்க உள்ளார். இதற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்திய - கனட விவகாரத்தில் தங்களின் நிலைபாட்டை ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டதாக கூறியுள்ளார்.


அமெரிக்க, இந்திய வெளிறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு:


இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இருவரும் என்ன பேச உள்ளனர் என்பதை முன்கூட்டியே சொல்ல விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்தச் சந்திப்பில் (ஜெய்சங்கருடன்) அவர் (பிளிங்கன்) நடத்தும் உரையாடல்களை முன்கூட்டியே சொல்ல விரும்பவில்லை. ஆனால், நாங்கள் தெளிவுபடுத்தியபடி, இந்த விவகாரத்தை ஏற்கனவே அவர்களிடம் எழுப்பியுள்ளோம். இது தொடர்பாக நாங்கள் எங்கள் இந்திய சகாக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.


கனட விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர்களை ஊக்குவித்துள்ளோம். மேலும் ஒத்துழைக்க அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்" என்றார்.


அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?


வெளிவுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெறாது என கூறப்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே, டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது, கனட பிரதமரின் குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் உள்பட மேற்குலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த ஐந்து முக்கியமான நபர்கள், கனட குற்றச்சாட்டு தொடர்பாக பேசியுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வியூக ரீதியான தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, கார்செட்டி, கனடாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹன் ஆகியோர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர்.


சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒத்துழைப்பு தர வேண்டும் என இந்தியாவிடமும் அவசரப்பட வேண்டாம் என கனடாவிடமும் அமெரிக்க அறிவுறுத்தியுள்ளது.