மதுரையில் 10 ரூபாய் கேட்டவர்களிடம் எதற்கு? என  கேள்வி கேட்ட வழக்கறிஞரை கட்டையால் தாக்கிய வழக்கில் இருவரை கைது செய்த ஜெய்ஹிந்த்புரம்  காவல்துறையினர்.

 

10 ரூபாய் செலவுக்கு பணம் வேண்டும்


 

மதுரை மாநகர் சுந்தராஜபுரம் எல்.எல் ரோடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் (66) என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர்கள் பாலசுப்ரமணியனிடம் 10 ரூபாய் செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளனர்.  அப்போது தனது பையில் இருந்த 10 ரூபாயை அவர்களிடம் கொடுத்தபோது மேலும் கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளனர். அதற்கு பாலசுப்ரமணியன் எதற்கு தர வேண்டும் என கேட்டபோது, இருவரும் திடீரென வாக்குவாதம் செய்து அருகில் கிடந்த கட்டையை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பாலசுப்ரமணியன் வலியால் துடித்துள்ளார். 

 


 

10 ரூபாய் கேட்டு  கட்டையால் அடித்தவர்கள் கைது

 

அப்போது கட்டையால் தாக்கிய இருவரும் பாலசுப்ரமணியனுக்கு கொலை மிரட்டலும் விடுத்து தப்பியோடினர். இதனையடுத்து அருகில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்த பாலசுப்ரமணியனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துசென்றுள்ளனர்.  இதனைத்தொடர்ந்து காயமடைந்த பாலசுப்ரமணியன் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (34) மற்றும் வள்ளுவர் தெற்குதெரு பகுதியை சேர்ந்த அசோக் (32) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் 10 ரூபாய் கேட்டு கொடுக்காத வழக்கறிஞரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.