கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 6.4.24 ம் தேதி முதல் 17.4.24 ம் தேதி வரை கட்டுகடங்காமல் தீப்பற்றிய நிலையில், இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மாமன்றத்தின் பார்வைக்கு ஒப்புதல் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. தீயை அணைக்க மொத்தம் செலவு 76,70,318 காட்டப்பட்டது.
இதில் உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்கு மட்டும் 27,51,678 செலவானதாக ரூபாய் கணக்கு காட்டப்பட்டது. இதை ஏற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி, விமர்சனங்களுக்கு உள்ளானது. டீ, உணவு உள்ளிட்டவை வாங்க இவ்வளவு செலவு ஆக வாய்ப்பில்லை எனவும், இதில் ஊழல் நடந்து இருப்பதாவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மாநகராட்சி விளக்கம்
இந்த நிலையில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க ஆன செலவு கணக்கு தொடர்பாக கோவை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், “கோயம்புத்தூர் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 257.04 சதுரடி கி.மீ ஆகும். இம்மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்கு 20 வார்டுகள் வீதம் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இம்மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 22,88,052 ஆகும்.
மாநகராட்சியின் எல்லைக்குள் 5,25,290 வீடுகளும், 42,180 வணிக வளாகங்களும், 879 உணவகங்களும், 106 தங்கும்விடு களும், 94 திருமண மண்டபங்களும் மற்றும் 20 காய்கறி சந்தைகளும் உள்ளன. மேலும், இம்மாநகராட்சியின் தினசரி 1055 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரம் செய்யப்படுகிறது.
இவ்வாறு சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாகவும் மக்காத குப்பைகள் சுமார் 150 மெட்ரிக் டன் வரையில் தினமும் வெள்ளலூர் உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக கடந்த 06-04-2024 அன்று தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிக அளவில் இருந்ததாலும், கோடைக்காலம் என்பதாலும் தீ அதிகளவில் பரவி குப்பைக் கிடங்கில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகள் எரிய தொடங்கின. இந்த தீ விபத்தின் காரணமாக வெள்ளலூர் சுற்றுப்புறங்களில் அதிகளவில் புகை மூட்டம் பரவியது.
அதிதீவிரமான புகையின் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தீயினையும் மற்றும் தீயினால் ஏற்பட்ட புகையினையும் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்களும், அதனை இயக்க தீயணைப்பு வீரர்கள் ஒரு வண்டிக்கு சுமார் 14 பேரும் பணிபுரிந்தனர்.
தீயணைப்பு நடவடிக்கைகள்
இத்தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய தண்ணீர் லாரிகள் நாள் ஒன்றுக்கு சுமார் 23 எண்ணிக்கையிலிருந்து 42 எண்ணிக்கை வரை பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று தீ உச்சம் பெற்ற 12 நாட்களில் தினமும் சுமார் 500 நபர்கள் முதல் 600 நபர்கள் சுழற்சி முறையில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் என 3 குழுக்களாக அமைத்து 24 மணி நேரமும் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
தீ தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
தீ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேலைகளுக்கும் தரமான உணவு வழங்கப்பட்டதுடன், வெயில் காலம் அதிகமானதால் 24 மணி நேரமும் குடிநீர் மற்றும் மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இத்தீ தடுப்பு பணியில் செலவினமாக ரூ.27.52 இலட்சம் செலவிடப்பட்டது. இச்செலவினங்கள் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பார்வைக்கும் பதிவிற்கும் வைக்கப்பட்டது.
அதே போன்று தீ தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக மேற்கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கும் மாமன்ற கூட்டத்தில் துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது” எனத் கூறப்பட்டுள்ளது.