NITI Aayog Meeting Today:பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் , பாஜக கூட்டணியில் உள்ள புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்:
இன்று ஜூலை 27, நடைபெறும் 9வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தை, இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்துள்ளது, இந்திய அரசியல் சூழலில் பரபரப்பு சூழ்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்ட கூட்டமானது, டெல்லி ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர்களும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
முதல்வர்கள் பங்கேற்பு:
ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), லால்துஹோமா (மிசோரம்), கான்ராட் சங்மா (மேகாலயா), நெய்பியு ரியோ (நாகாலாந்து), என் பிரேன் சிங் (மணிப்பூர்), பெமா காண்டு (அருணாச்சல பிரதேசம்), மாணிக் சாஹா (திரிபுரா) , மற்றும் பிரேம் சிங் தமாங் (சிக்கிம்) - கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவற்றுள், லால்துஹோமாவின் ZPM மட்டுமே சுயேச்சைக் கட்சியாகும், இந்த கட்சி மட்டும்தான் பாஜக மற்றும் இந்திய கூட்டணி இணையாத கட்சியாகும்.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது ஏன்?
2024 பட்ஜெட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சார்பாக குரல் எழுப்பப்பட்டது. இது "பழிவாங்கும் பட்ஜெட்" என்று எதிர்க்கட்சிகள் முன்னதாகவே புறக்கணிப்பை அறிவித்தன. மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பாஜகவை புறக்கணித்த மாநிலங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான பழிவாங்கும் செயலாகத் தெரிகிறது. இந்திய அணிக்கு வாக்களித்தவர்களை பழிவாங்கும் வகையில் பட்ஜெட் தயாரித்துள்ளார். மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து , இந்தியா கூட்டணியைச் சார்ந்த மம்தாவைத் தவிர இதர முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
மம்தா பங்கேற்பு:
மம்தா பானர்ஜி கூட்டத்தை புறக்கணிப்பதற்கு எதிராக முடிவு செய்திருந்தாலும், இது ஒரு "பாரபட்சமான பட்ஜெட்" என்று இந்திய கூட்டணி முதல்வர்களின் கருத்துடன் ஒத்துபோகிறார். மேலும் அவர் தெரிவிக்கையில், வங்காளத்தையும் பிற மாநிலங்களையும் பிரிக்க பாஜக முயற்சிக்கிறது. மேலும், எங்களது மாநித்தின் பிரச்னைகளை, குரல்களை கூட்டத்தில் எடுத்துரைக்க செல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் புறக்கணிப்பு:
இந்தியா கூட்டணி முதலமைச்சர்கள் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள புதுவை முதலமைச்சர் ரங்கசாமி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே, பாஜவினருக்கும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாக தகவல் வருவதை அறிய முடிந்தது. இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.