ராயன்


தனுஷ் நடித்துள்ள ராயன் படம் நேற்று ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராம் , செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


ராயன் பட முதல் நாள் வசூல்


தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநராகவும் நடிகராகவும் தனுஷிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் படத்தின் ரிலீஸுக்கு முன்பிருந்தே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. முன்பதிவுகளில் மட்டும் ராயன் படம் 6 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.


ராயன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் ராயன் படம் வசூல் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி  ராயன் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 12.5 கோடி வசூலித்துள்ளது. தமிழில் இப்படம் 11 கோடியும் தெலுங்கில் 1.5 கோடியும் படம் வசூலித்துள்ளது.






இந்தி ரசிகர்கள் மத்தியில் ராயன் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் இருந்தபோதும் அங்கு படம் பெரியளவில் கல்லா கட்டவில்லை. போதுமான ப்ரோமோஷன்கள் செய்யாததே இதற்கு காரணம் என சினிமா ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


கர்ணன் வசூலை முறியடித்த ராயன்


தனுஷ் நடித்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கர்ணன் இருந்து வந்தது. கர்ணன் படம் முதல் நாளில் மொத்தம் 10.40 கோடி வசூல் செய்தது. தற்போது ராயன் இந்த வசூலை முறியடித்துள்ளது. தனுஷின் கரியரில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படமாக ராயன் அமைந்துள்ளது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


ராயன் கதைச் சுருக்கம்


தனது உடன்பிறப்புகளின் மேல் அதீத பாசம் கொண்ட ராயன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். வடசென்னையை மையப்படுத்தி நடக்கும் இக்கதை அங்கு இரு கேங்ஸ்டர் கும்பலிடம் இருந்து தனது குடும்பத்தை பாதுகாக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவதே படத்தின் கதை. பலமுறை பார்த்த கதை என்றாலும் தனுஷ் கதாபாத்திரங்களை கையாண்டிருக்கும் விதமும் ஆக்‌ஷனை முதன்மையாக கருதாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது படத்தின் சாதகமான அம்சமாக கருதப் படுகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த துஷாரா விஜயன் , சந்தீப் கிஷன் , எஸ்.ஜே சூர்யா , செல்வராகவன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. ரஹ்மானின் பின்னணி இசை ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கூடுதல் சிறப்பம்சங்கள்.