கர்நாடகாவில் மாடுகளை கொண்டு சென்றதற்காக, இஸ்லாமியர் ஒருவரை பசு பாதுகாவலர்கள் என்று கூறி கொள்பவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாலையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.


பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் கொலை:


கர்நாடகாவில் நேற்றைக்கு முந்தைய நாள் ( சனிக்கிழமை ) கால்நடை வியாபாரி இட்ரிஸ் பாசா என்பவர் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டு இருந்தார் என கூறப்படுகிறது. அப்போது பசு பாதுகாவலர்கள் கூறி கொள்ளும் நபர்களான புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள், இட்ரிஸ் பாஷா சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மாடு ஏற்றிச் சென்றது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு இட்ரிஸ் பாசா,  கால்நடை சந்தையில் இருந்து பெற்ற ஆவணங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது. 


அதை ஏற்க மறுத்த புனீத் கேரேஹள்ளி கூட்டத்தினர், பாசாவிடம் 2 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 2 லட்சம் ரூபாயை பாசா தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த புனீத் கூட்டத்தினர், பாசாவை தாக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இட்ரிஸ் பாசாவின் உடல் கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாலையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. 




வழக்குப்பதிவு:


இதையடுத்து, குற்றவாளிகளாக அறியப்படும் புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகினர். சம்பவத்தை அறிந்த உறவினர்கள், இச்சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று (ஏப்ரல் 1) இறந்தவரின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது, மேலும் இத்ரீஸின் மர்ம மரணத்திற்கு காரணமான பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 


இதையடுத்து, காவல்துறையினர் தலையீட்டை தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கேரேஹள்ளி உள்ளிட்டோர் மீது கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Also Read: Bihar Violence: ராம நவமி வன்முறையால் 144 தடை உத்தரவு: 106 பேர் கைது; பீகாரில் என்ன நடக்கிறது?