பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் என்ன நடந்தது? ஏன் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
பீகார் மாநிலம் சசாராம் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ராம நவமி ஊர்வலத்தின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. குழுக்களுக்கிடையே மோதலின்போது, கல்வீச்சில் ஈடுபட்டதாகவும், பல வாகனங்கள் மற்றும் சாலையோர கடைகளை சேதப்படுத்தியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு பீகாரின் ஷரீப் மற்றும் நாளந்தா மாவட்டங்களில் மீண்டும் மோதல்கள் வெடித்தது. அதனை தொடர்ந்து, அங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குண்டுவெடிப்பு:
வன்முறை சம்பவங்கள் சற்று தணிந்த நிலையில், நேற்று சசாராம் பகுதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதனால் 6 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவு கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, சசாராம் பகுதியைச் சேர்ந்த 26 பேர் மற்றும் நாளந்தா பகுதியை சேர்ந்த 80 பேர் என இதுவரை 106 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
”இந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை”
இந்த சூழ்நிலை காரணமாக பீகாரில் உள்ள இந்துக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதாகக் கூறும் வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்த ரோஹ்தாஸ் காவல்துறை, இது "ஆதாரமற்றது" மற்றும் "அபத்தமான வதந்தி", யாரும் தங்கள் பகுதியை விட்டு வெளியேறவில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் செவி சாய்க்க வேண்டாம் என்றும் சசாராமில் நிலைமை அமைதியாகவும் இயல்பாகவும் தற்போது உள்ளது என்று தெரிவித்துள்ளது
சசாராமில் நடந்த குண்டு வெடிப்பானது, நகரில் உள்ள தனியார் பகுதியில் சட்டவிரோத வெடி பொருட்களை கையாளும் போது, இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
”யாரையும் விட மாட்டோம்”
ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏவும் செய்தித் தொடர்பாளருமான சக்தி சிங் யாதவ் சனிக்கிழமை கூறுகையில், ராம நவமி யாத்திரை மோதலில் ஈடுபட்ட அனைவரும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வன்முறைக்கு காரணமானவர்கள் யாரையும் விட மாட்டோம் என தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, ராம நவமி மோதல்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், இந்த சம்பவங்கள் "இயற்கையானவை" அல்ல என்றும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யாரோ "இயற்கைக்கு மாறான" ஒன்றை வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்றும் கூறினார். இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவும், யாத்திரை மோதல்களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறியவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.