ஜம்மு-காஷ்மீரில் திருடன் ஒருவன் பெண்ணின் விரலை வெட்டி மோதிரத்தை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கொள்ளைக்காரன் ஒருவன் இன்று ஒரு பெண்ணின் விரலை அறுத்து, அவரது மோதிரங்களையும், காதில் இருந்த கம்மல்களை அறுத்துக்கொண்டு சென்றதால் அவரது காது மடல்களும் காயமடைந்தது. குல்காம் மாவட்டத்தில் உள்ள அக்ரூ கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பெண் நெல் வயல் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கொள்ளையன் அப்பெண்ணை பின்னால் இருந்து தாக்கியதாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதிரம் மிகவும் இறுக்கமாக இருந்ததால் திருடன் அவரின் விரலை வெட்டியதால் அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். மேலும், பெண்ணின் தங்க காது வளையங்களை வலுக்கட்டாயமாக இழுத்ததால் இரண்டு காது மடல்களும் காயமடைந்தன.
இதனைத்தொடர்ந்து, படுகாயம் அடைந்த பெண் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை சிறப்பு சிகிச்சைக்காக அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர். அத்துடன் கொள்ளையனை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்