2019-ஆம் ஆண்டு காணாமல் போன சிறுமி ஒருவர் படிக்கட்டுக்கு அடியிலிருந்த ரகசிய அறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்போது 6 வயதாகும் பைஸ்லி ஷுல்டிஸ், திங்கள்கிழமையன்று சாகெடீஸ் நகரிலுள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் இப்போது அவருடைய சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆன மூத்த சகோதரியுடன் மீண்டும் இணைந்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது பெற்றோர் அவருடைய வாழ்க்கையில் குறுக்கீடு செய்ததாகவும் குழந்தையின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூயார்க்கில் உள்ள தியோகா என்ற மாவட்டத்தில் இருந்து பைஸ்லீ அவரது நான்காவது வயதில் காணாமல் போனதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது. அவருடைய பெற்றோரான, 33 வயதான கிம்பர்லி கூப்பர் மற்றும் 32 வயதான கெர்க் ஷுல்டிஸ் ஜூனியர் ஆகியோரால் அவர் கடத்தப்பட்டதாக அந்த நேரத்தில் அதிகாரிகள் நினைத்தனர்.
உல்ஸ்டர் மாவட்டத்தில் உள்ள சாகெர்டீஸ் நகரில் ஒரு மறைவான இடத்தில் பைஸ்லி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் வீட்டைச் சோதனை செய்தனர். காவல்துறை நடத்திய சோதனையின்போது, வீட்டின் உரிமையாளரான 57 வயது நிரம்பிய கெர்க் ஷுல்டிஸ் சீனியர் அங்கிருந்தார். பைஸ்லீ எங்கிருக்கிறார் என்பது குறித்துத் தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த தேடுதலில், துப்பறியும் நபர்களில் ஒருவர் வீட்டின் அடித்தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் விசித்திரமாகக் கட்டப்பட்டிருப்பதைக் கவனித்தார். அதில் சில பலகைகளை அகற்றிய பிறகு, சிறிய ஒரு இடத்தில், ஈரமான, மிகவும் குளிரான அடைக்கப்பட்ட பகுதியில் பைஸ்லீ மற்றும் கூப்பார் மறைந்திருந்ததை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பைஸ்லியை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்து அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர். பைஸ்லீயின் பெற்றோர், அவரையும் அவரது மூத்த சகோதரியையும் வளர்ப்பதற்கான உரிமையை இழந்தனர். அதுவே பைஸ்லீயை கடத்தியதன் காரணம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
"மூத்த சகோதரியை சட்டப்பூர்வ பாதுகாவலர் மற்றும் மாவட்ட அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாக யாரோ பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனால் பெற்றோர் பைஸ்லீயை அழைத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்" என்று சாகெர்டீஸ் காவல்துறைத் தலைவர் ஜோசஃப் சினாக்ரா கூறினார்.
கூப்பர், ஷுல்டிஸ் ஜூனியர் மற்றும் ஷுல்டிஸ் சீனியர் அனைவரும் கைது செய்யப்பட்டு, பைஸ்லீயின் கடத்தலுக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டனர். பிறகு, தந்தை, மகன் இருவரும் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது. கூப்பருக்கு ஏற்கெனவே ஒரு பிடிவாரன்ட் இருந்ததால், உல்ஸ்டர் மாவட்ட சிறையில் இருக்கிறார். இதுகுறித்த விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் காணாமல் போனதாகக் கூறப்படும் பெரும்பாலான குழந்தைகள் குறுகிய காலத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்படுகிறார்கள் என்று காணாமல் போன குழந்தைகளுக்கான தேசிய மையம் கூறுகிறது. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் நிகழ்த்தும் குழந்தை கடத்தல் சம்பவங்களில் சராசரியாக 10 மாதங்களுக்கும் மேலாக, அதிக காலத்திற்கு காணாமல் போவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.