நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, முதல் இடத்தில் தர்மபுரியும் கடைசி இடத்தில் சென்னையும் உள்ளன.


தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெறுதல், அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் தீவிரப் பிரச்சாரம் என தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியது.


இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 


இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து சாமானிய மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 


இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களிலும் பதிவான வாக்குப் பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 47.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.




கோவை மாவட்டத்தில் 46.52% வாக்குகளும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 54.15% வாக்குகளும் திருச்சியில் 57.09% வாக்குகளும் பதிவாகின. விழுப்புரத்தில் 60.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மதுரை மாவட்டத்தில் 42.70% வாக்குகளும் பதிவாகின.


புதுக்கோட்டையில் 57.37% வாக்குகளும் மயிலாடுதுறையில் 51.97% வாக்குகளும் பதிவாகின. திருவண்ணாமலையில் 54.81%, ராமநாதபுரத்தில் 52.46%, கன்னியாகுமரியில் 50.44%, பெரம்பலூரில் 55.58% பதிவானது. 


திருவாரூர் மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 56.2 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டில் 37.99%, சேலத்தில் 56.37%, சிவகங்கையில் 52.95 % வாக்குகள் பதிவாகின. தேனியில் 55.71 % வாக்குகளும், அரியலூரில் 62.34 % வாக்குகளும் பதிவாகின. 


தூத்துக்குடியில் 49.35 % வாக்குகள் பதிவாகின. அதேபோலத் தென்காசியில் 58.05%, கள்ளக்குறிச்சி 61.07% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக  தர்மபுரி மாவட்டத்தில் 65.68 % வாக்குகள் பதிவாகின. 


கரூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரத்தின்படி வாக்கு சதவீதம் 63.56 ஆக உள்ளது. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் வாக்குப் பதிவு, 31.89 சதவீதம் ஆக உள்ளது. சென்னையில் தொடர்ந்து வாக்குப்பதிவு மந்தமாக இருப்பதால் பொதுமக்கள் அவசியம் வாக்களிக்க வேண்டுமென மாவட்டத் தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிடிபில் வீடியோக்களை காண