சென்னை அடுத்த  தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பழைய ஜி.எஸ்.டி சாலையில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை போனதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல், மேலும் நான்கு கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மொத்தம் அவர்கள் எட்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அதில் நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடி உள்ளனர். 



இரும்புலியூர் பழைய ஜிஎஸ்டி சாலையில் உள்ள விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான மீன் கடையில் இருந்து 2 பழைய செல்போன், அடுத்து சுப்புராயன் என்பவரது கடையில் 4000 ரூபாய் பணம், கடையில் விற்பனைக்காக வைத்திருந்த முகக்கவச பண்டல்களையும் எடுத்துச் சென்றுள்ளனர், அதேபோல கணேஷ் பாபு என்பவரது பால் கடையில் 5000 ரூபாய் பணம், தமீம் அன்சாரி என்பவரது செல்போன் கடையில் 10 பழைய செல்போன்கள், ஸ்பீக்கர் பாக்ஸ்,  உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.



இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றவர்கள்,  காலை அருகில் உள்ளவர்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்ததன் பேரில் கடையின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது கடையில் இருந்த பணம், பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது.  இது குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரித்து வருகின்றனர்.



கடையின் பூட்டை உடைத்த கொள்ளையர், கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்திய இரும்பு ராடை ரயில்வே தண்டவாளத்தின் அருகே போட்டு விட்டு சென்றுள்ளான். அதனை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் திருட்டு முயற்சி, அத்துமீறி அடுத்தவர் இடத்தில் நுழைந்தது, கொள்ளை அடித்தது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுவருவது தொடர்கதையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.



இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்,  இனியாவது இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

 

இது உங்களுக்காக : -