மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணிய சுவாமி நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளில் பெகசஸ் என்ற உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தின் மூலமாக இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட பலரது தொலைபேசி அழைப்புகளும் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், அதன் அறிக்கை வெளியிடப்பட உள்ளது என்றும் பொதுவான வார்த்தைகளில் சூசகமாக பதிவிட்டார்.
அவரது பதிவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டதுபோல, பெகசஸ் ஸ்பைவேர் மூலமாக உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியாவின் 40 முன்னணி பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியானது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பட்டியலில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் தொலைபேசி அழைப்புகளும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விவகாரம் தற்போது நாட்டில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பெகசஸ் என்ற உளவு பார்க்கும் தொழில்நுட்பம் இஸ்ரேல் நாட்டில் உள்ள என்.எஸ்.ஓ. என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். அந்த நிறுவனத்தினர், தாங்கள் பெகசஸ் தொழில்நுட்பத்தை சரிபார்க்கப்பட்ட அரசாங்கத்தினரிடம் மட்டுமே விற்பனை செய்கிறோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை, பெகாசஸ் உளவு பார்க்கும் தொழில்நுட்பம் வணிக நிறுவனம் என்பதும், பணம் செலுத்துபவர்களுக்காக வேலை செய்பவர்கள் என்பதும் தெளிவாகி உள்ளது. இதனால், தவிர்க்க முடியாத கேள்வி என்னவென்றால் “இந்திய ஆபரேஷனுக்கு” பணம் கொடுத்தது யார்? ஒரு வேளை இந்திய அரசு இதை செய்யவில்லை என்றால் யார் செய்தது? நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மோடி அரசின் கடமை” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த குற்றச்சாட்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது. மத்திய அரசு எவ்வித உளவு வேலையிலும் ஈடுபடவில்லை. இதில், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவில் அங்கீகாரமற்ற நபர்கள் யாரும் சட்டவிரோத கண்காணிப்பில் ஈடுபடுவது சாத்தியம் இல்லை. அந்த செல்போன் எண்கள் உளவு பார்க்கப்பட்டதா? அல்லது முயற்சி செய்யப்பட்டதா? என்று எந்த தகவலும் இல்லை. தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்த முடியாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.