நாட்டில் சமீபகாலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் நம் மனதை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் ஒரு சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.


இளம்பெண் திடீர் மரணம்:


தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது கரீம்நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது நேரெல்லா பகுதி. இந்த பகுதியில் வசிப்பவர் செப்யலா நர்சையா. இவருக்கு வயது 49. இவரது மனைவி யெல்லவ்வா. அவருக்கு வயது 43. இவர்களது மகள் பிரியங்கா. அவருக்கு வயது 24 ஆகும்.


பிரியங்காவிற்கு திருமணமாகி ஒரு வயதே ஆன குழந்தை உள்ளது. இந்த நிலையில், இந்த பெண் சமீபநாட்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென பிரியங்கா கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து பிரியங்காவின் கணவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


மனநல பிரச்சினை:


ஆனால், பிரியங்காவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராமத்தினர் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் பிரியங்காவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. உயிரிழந்த பிரியங்கா கடந்த சில வருடங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்துள்ளனர். இருப்பினும் பிரியங்காவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் வந்துள்ளனர். ஆனாலும், எந்த பலனும் அளிக்கவில்லை.


இந்த சூழலில், பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனநல பிரச்சினைக்கு நடுவிலே அவருக்கு திருமணமும் நடைபெற்று குழந்தையும் பிறந்துள்ளது. பிரியங்கா குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும், கோயில்களுக்கும் அழைத்துச் சென்று வந்துள்ளனர். ஆனால், பிரியங்கா மனநல பிரச்சினை குணம் அடையாமலே இருந்து வந்துள்ளது.


பெரும் அதிர்ச்சி:


இந்த சூழலில், பிரியங்காவை அவரது பெற்றோர்களே தங்களது வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில், பிரியங்கா மன நல பிரச்சினையால் மிகவும் அவதிப்படுவதால் அவரது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. இதனால், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, வீட்டில் பிரியங்கா தூங்கிக் கொண்டிருந்தபோது அவரின் கழுத்தை அவரது பெற்றோர்களே கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.


பின்னர், அடுத்த நாள் காலையில் அதை இயற்கை மரணம் போல காட்டுவதற்காக பிரியங்காவின் பெற்றோர்கள் இருவரும் நாடகம் ஆடியுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, செப்யலா நர்சையா – யெல்லவ்வாவை போலீசார் கைது செய்தனர். மன நல பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பெற்றோர்களே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: MS Dhoni: தோனியின் எதிர்கால திட்டம் என்ன? ஐபிஎல் உண்டா? இல்லையா? எக்ஸ்குளுசிவ் ரிப்போர்ட்


மேலும் படிக்க: கணவனை மாட்டி விட நினைத்த மனைவியின் பலே நாடகம் - போலீஸை அதிர வைத்த சம்பவம் ?