செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில், கணவன் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் போலி குற்றச்சாட்டை முன்வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

காதல் திருமணம்


திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டம்  திருப்போரூர், மடம் தெருவில் வசித்து அதே பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். திரிபுரா மாநிலத்தில் ஏற்கனவே திருமணம் நடந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த பர்வேஜ் மியா (வயது 27) சென்னை உத்தண்டியில் வசித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் காதல்  திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

மனைவியை துன்புறுத்திய  கணவன்


கணவன் அடிக்கடி போதையில் மனைவியை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி மனைவிக்கு போன் செய்த பர்வேஜ் மியா முக்கிய விஷயம் குறித்து பேச வேண்டும் என்று கூறி கேளம்பாக்கம் மார்க்கெட் சாலைக்கு வருமாறு அழைத்துள்ளார். 

 

பின்னர் அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் சென்றதும் அந்த காரில் மேலும் மூன்று நபர்களை ஏற்றிக்கொண்ட பர்வேஜ் மியா அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து அங்கு அவரும் காரில் வந்த மூன்று நபர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மயக்கமடைந்த நிலையில் பெண் பெருங்குடி சுங்கச்சாவடி அருகே இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப் பதிவு


அப்பெண் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவர் பர்வேஜ் மியா  மற்றும் அவருடன் கூட்டு பாலியலில் ஈடுபட்டதாக 3 மர்ம நபர்களை தேடி கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர்,  சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் மூலம் ஆய்வு செய்தனர்.

மனைவியின் பலே நாடகம்


 

இந்தநிலையில் இந்த வழக்கில் திடீர் மாற்றமாக, தினமும் குடித்து விட்டு வந்து அடித்து உதைத்ததால் அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஆனால், அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்ததால் அவரை பழிவாங்க இதுபோன்று பொய் புகார் கொடுத்ததாகவும், காவல்துறையினர் பெண்ணிடம் தொடர் விசாரணையில் தெரியவந்தது.  பின்னர் பொய்யான புகார் அளித்துள்ளதை  காவல் நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுதுள்ளதை தொடர்ந்து காவல் துறையினர்  பெண்ணுக்கு அறிவுரை கூறியும் மற்றும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். காதலித்த கணவன் தொடர்ந்து தன்னை, கொடுமைப்படுத்தி வந்ததால் நூதன முறையில் கணவனை மாற்றிவிட மனைவி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.