“ஊர் சுற்றும்” தோனி:
ஐபிஎல் “ப்ளே ஆஃப்” போட்டிக்குத் தகுதிப் பெறாமல், சிஎஸ்கே வெளியேறியது குறித்து இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தோல்வி அடைந்த அடுத்த நாளே, தமது சொந்த ஊரான ராஞ்சிக்குப் பறந்துச் சென்றுவிட்டார் தல தோனி. போனது மட்டும் இல்லாமல், தம்முடைய “ஸ்பெஷல் காதலியான” மோட்டார் பைக்குடன் ஊரை சுற்றி வரவும் ஆரம்பித்துவிட்டார். 


இப்பப் பலருடைய கேள்வி என்னவென்றால், தல தோனி, தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியை ஆடிவிட்டாரா? இல்லைய? ஓய்வு அறிவிப்பு எப்போதும் வரும்? ப்ளேயர் இல்லாவிட்டாலும் சிஎஸ்கே-வில் என்ன ரோல் செய்யப் போகிறார் தோனி? என பல கேள்விகள் நம்மைச் சுற்றி வருவது மட்டுமல்ல, சமூக வலைதளங்களில் பட்டிமன்றமே தொடங்கிவிட்டது என்றாலும் மிகையில்லை. 


தோனி பற்றி நண்பரின் வாக்குமூலம்:
இப்படிப்பட்ட நிலையில், தோனியின் நெருங்கிய பால்ய நண்பரும், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டவர்களில் ஒருவருமான பரம்ஜித் சிங், தன் தோழனுக்கு இது கடைசி ஐபிஎல் இல்லை என்பதுடன், அடுத்த ஆண்டும் நிச்சயம் விளையாடுவார் என்பதை நம்பிக்கையாக தமது நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார். இதே பரம்ஜித் சிங்தான், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்பதை முன்கூட்டியே, தமது நண்பர்களிடம் தெரிவித்து இருந்தார். எனவே, தல தரிசனம் அடுத்த ஆண்டும் இருக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் தெம்பாக இருக்கலாம். 


முழங்கால் வலியும் லண்டன் சிகிச்சையும்:
ஆனால், தற்போது வில்லனாக வந்திருப்பது கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் தோனிக்கு முழங்கால் தசை பிரச்சினை தலைத் தூக்கி இருக்கிறது. இதனால், வேகமாக ஓடுவதில், தோனி தடுமாறுவதை, போட்டியின் போதே பார்க்க முடிந்தது. இந்தச் சூழலில்தான், தற்போது அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்லப்போகிறார் என்ற உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அடுத்த வாரம் லண்டன் மருத்துவமனையில் தோனிக்கு சிகிச்சை என்ற தகவலும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. தோனிக்கு நெருங்கிய ராஞ்சி நண்பர் வட்டாரங்களில் விசாரித்த போது, சிகிச்சைக்குச் செல்வது உறுதி, எந்த மருத்துவமனை, எந்த நகரம், எப்போது என்பது உறுதி செய்யப்படவில்லை எனக் கூறுகின்றனர். 


“ஃபுல் டைம்மா” அல்லது “இம்பேக்ட் ப்ளேயரா?”
அவருடைய முழங்கால் சிகிச்சைக்குப் பின்னர், குறைந்தது 4 முதல் 6 மாதம் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் கூறி வருவதால், அதன்பின் அவரது உடல்தகுதியை வைத்துக் கொண்டுதான், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாடுவதா அல்லது “இம்பேக்ட் ப்ளேயர்” போல் “பேட்டிங்” மட்டும் செய்வதா என்பதை தோனி முடிவு செய்வார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.


தோனி எதிர்காலம் குறித்து சிஎஸ்கே நிர்வாகம்:
இது தொடர்பாக, சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சில செய்தியாளர்களிடம் கூறும் போது, “தோனி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இது தொடர்பாக , அவரிடம் நாங்கள் பேச மாட்டோம். அவர் என்னச் செய்யப்போகிறார் என்பது குறித்து அவர் சொல்லும்போது, நாங்கள் நிச்சயம் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம் என்பதுடன், தற்போது அவரது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 


சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இது தொடர்பாக கேட்டபோது, “தோனிக்கு முழங்கால் வலி இருப்பது உண்மை, அதற்காகச் சிகிச்சை எடுக்கப்போகிறார் என்பதும் உண்மை. அவரது உடல்தகுதி குறித்து, தேவையான நேரத்தில் உறுதியான முடிவை அவரே தெரிவிப்பார்” என காசி விஸ்வநாதனைப் போல், ஃப்ளெமிங்கும் தோனியின் பக்கமே பந்தைத் திருப்பிவிட்டார். 


ஏலத்தில் பங்கேற்கப்போகும் தோனி:
ஏற்கெனவே, தோனியே ஒரு பேட்டியின் போது, தமது கடைசி ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் எனக் கூறியிருப்பதால், அடுத்த ஆண்டு, சிஎஸ்கே அணிக்காக, தோனி களமிறங்குவது உறுதி என சிஎஸ்கே நிர்வாக வட்டாரத்தில் பேசுகின்றனர். ஆனால், எல்லாம் ஆட்டங்களிலும் முழுமையாக விளையாடுவாரா அல்லது இம்பேக்ட் ப்ளேயர் போல் வந்துச் செல்வாரா என்பதும் 6 மாதத்திற்குப் பிறகுதான் தெரிய வரும். ஆனால், உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால், 2025 ஐபிஎல் போட்டிகளுக்கான  மெகா ஏலத்தில், அணியை தேர்வு செய்வதில் தோனியின் முழு பங்கு இருக்கும் என சிஎஸ்கே நிர்வாக மட்டத்தில் உள்ள நமது நண்பர்கள் கூறுகின்றனர். பெயரை வெளியே சொன்னால், பல பிரச்சினைகள் வரும் என்பதால், பெயர் சொல்லவில்லை. இருந்தாலும் தகவல் உறுதி என்பதை மட்டும் நம்மிடம் அடித்துக் கூறினர். 
இது மட்டும் உறுதி:
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, அடுத்த 6 மாதத்திற்கு, தமது ஓய்வு குறித்து தோனி வாய்திறக்க மாட்டார் என்பதுடன், மருத்துவ ஓய்விற்குப் பின், சிஎஸ்கே அணிக்காக, ஏலத்தில் பங்கேற்பது மட்டும் இல்லாமல், அப்போதுதான் தம்முடைய ஐபிஎல் எதிர்காலம் குறித்தும் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். அதுவரை, தோனி குறித்த  கதைகளுக்கும், செவி வழி செய்திகளுக்கும் குறைவில்லாமல், சமூக வலைதங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் என்பது மட்டும் 100 சதவீதம் உறுதி.