திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தரின் செல்போனை திருடியவருக்கு 3 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட ஐம்பது நாட்களிலேயே தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வரதராஜன் அதிரடி உத்தரவிட்டார்.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மார்ச் 23-ம் தேதி தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஹரிஹரன்(25) என்பவர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது ஹரிஹரன் கடலில் புனித நீராடி விட்டு அங்குள்ள நாழிக்கின்ற்றில் புனித நீராட செல்லும் போது அவரது தோல் பையில் ரூ.36,000/- மதிப்புள்ள செல்போனை வைத்துவிட்டு, நாழிகிணற்றில் குளித்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது அவரது செல்போன் திருடுபோனது தெரியவந்தது.






இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் ஹரிகரன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் திருச்சி மாவட்டம், மணக்கால் லால்குடி பகுதியை சேர்ந்த பாலாஜி (26) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பக்தரின் செல்போனை திருடிய பாலாஜிக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிபதி வரதராஜன் அதிரடி உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கினார். காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐம்பது நாட்களிலேயே செல்போன் திருடிய வழக்கில் பாலாஜிக்கு அதிகபட்ச தண்டணையாக மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




இதேபோன்று திருச்செந்தூரில் இருச்சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்களுக்கு 15 மாத காலம் சிறைத்தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வரதராஜன் தீர்ப்பளித்தார்.


தூத்துக்குடி மாவட்டம் திரச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26- ம் தேதி திருச்செந்தூரிலிருந்து குலசை செல்லும் சாலையில் அமைந்துள்ள எஸ்.கே. நகரை சேர்ந்த மந்திரம்(53) என்பவர் வீட்டின் முன்பு இரவு நிருத்திருந்த அவரது இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்து மந்திரம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.




விசாரணையில் திருச்செந்தூர் பகுதியில் பல்வேறு இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த திருநெல்வேலி சேர்ந்த ரசூல், முடிவைத்தானேந்தலை சேர்ந்த மாடசாமி, தூத்துக்குடி புதுக்கோட்டை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருசக்கர வாகன திருட்டு வழக்கு திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வரதராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் இன்று திருச்செந்தூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த ரசூல் - க்கு 8 மாத சிறை தண்டனையும், மாடசாமிக்கு 4- மாத சிறை தண்டனையும், முத்துகிருஷ்ணனுக்கு 3- மாத சிறை தண்டனையும் என தனித்தனியே தண்டனையை பிறப்பித்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வரதராஜன் உத்தரவிட்டார். இருசக்கர வாகனம் திருடி விற்பனை செய்த கூட்டாளிகள் மூவருக்கும் முறையே 15 மாத காலம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டு, மூவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.