செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரிகளில்  பயின்று வரும் சாத்தங்குப்பம் பகுதியைச் சேர்ந்த  முகேஷ் (18), உதயகுமார் (19) கல்லூரி மாணவர்கள். இவர்கள் இருவரும் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள வெவ்வேறு, தனியார் கல்லூரியில் பி காம் படித்து வருகின்றனர். சாத்தான் குப்பம் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த, விஜய், என்பவர் உதயகுமார் மற்றும் முகேஷ் ஆகிய இருவருடன் , பள்ளி படிக்கும் பொழுது ஒன்றாக படித்துள்ளனர். மூவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால், ஒன்றாக ஊர் சுற்றுவது விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

இன்று திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் குளத்திற்கு சென்ற  போது குளத்தில் மூன்று பேரும் தவறி விழுந்துள்ளனர். பின்னர் மூவரும் குளத்தில் உயிருக்கு போரடிய நிலையில் குளத்தின் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நண்பர்களில் ஒருவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டதால், மாலை மற்றும் காலை வேளையில் குளிக்க வேண்டும் என்பதற்காக குளத்திற்கு சென்று உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



 

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கேளம்பாக்கம் காவல்துறையினர் மற்றும் சிறுசேரி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி கல்லூரி மாணவர்களின் மூன்று பேரின் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட மூவரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, கேளம்பாக்கம் காவல்துறையினர் அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் மூவரும் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினரா அல்லது குளத்தில் கால் நனைத்தபோது தவறுதலாக குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனரா என்பதைக் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்