சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வகுப்பறையில் இஸ்லாமிய மாணவனுக்கும் பேராசிரியர் ஒருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.


கடலோர கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் வகுப்பறை ஒன்றில் தன்னை பயங்கரவாதி என அழைத்ததற்காக இஸ்லாமிய மாணவன் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வகுப்பறையில் நடந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்த மாதிரியான கருத்தை எப்படி சொல்லலாம் என மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.


இது நகைச்சுவையான முறையில் கூறப்பட்டது என்று பேராசிரியர் தெளிவுபடுத்தினார். ஆனால், அதை ஏற்று கொள்ளாத மாணவன், "26/11 பயங்கரவாத சம்பவம் வேடிக்கையானது அல்ல. முஸ்லீமாக இருந்து இந்த நாட்டில் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்வது வேடிக்கையானது அல்ல" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.


அப்போது, அந்த மாணவனிடம் பேராசிரியர் மன்னிப்பு கோருகிறார். மேலும், மாணவன் தன்னுடை மகனை போன்றவர் என பேராசிரியர் கூறுகிறார்.


அதற்கு அந்த மாணவர், “உங்கள் மகனை இப்படி நடத்துவீர்களா? வகுப்பில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் அவரை பயங்கரவாதி என்று முத்திரை குத்திவிடுவீர்களா? மன்னிப்பு கேட்பது மட்டும் உதவாது. நீங்கள் இங்கே எப்படி சித்தரிக்கிறீர்கள் என்பதை இது மாற்றாது" என பதில் அளித்தார்.


பின்னர், மாணவருடன் பேசி தனிப்பட்ட அளவில் பேராசிரியர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினை மாணவனுக்கும் பேராசிரியருக்கும் இடையே தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் விவாத பொருளை கிளப்பியுள்ளது. 


 






குறிப்பிட்ட சமூகத்தினர் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பிரபல புலனாய்வு பத்திரிகையாளர் ராணா அயூப், "இஸ்லாமியரை ஒரு பேராசிரியர் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதற்கு ஒரு முஸ்லீம் மாணவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்களில் இந்த பாரபட்சத்தையும், வெறுப்பையும் பரவி இருக்கும் இந்த மதவெறியிலிருந்து இந்தியாவிலுள்ள இளம் மனங்கள் தங்களைக் காத்துக்கொள்வதை கண்டு நான் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். 


அந்த சிறுவன் மீது பெரிய மரியாதை ஏற்படுகிறது. ஆனால், அவரது தைரியத்தை நாம் பாராட்ட வேண்டிய நேரம் இதுவல்ல.


நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டிய இடத்தில் போராட்டம் நடத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். அது அவரின் மீது உளவியல் ரீதியாக எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என பதிவிட்டுள்ளார்.