கொருக்குப்பேட்டை பாரதிநகர் பளாக்ஹவுசிங் குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு ரமேஷ் என்ற
மகன் உள்ளார். இவருக்கு வயது 20. ரமேஷ் மண்ணடியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், ரமேஷ் நேற்று இரவு தனது நண்பர் ஆனந்தன் என்பவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்று அங்கு கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. அப்போது, ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் அவர்கள் வைத்திருந்த இரும்புக்கம்பி மற்றும் கட்டைகளால் ரமேஷை பலமாக தாக்கியது. இதனால், படுகாயமடைந்த ரமேஷ் கீழே மயங்கி விழுந்தார்.
ஆனாலும், அந்த கும்பல் ரமேஷை விடாமல் தாக்கியதுடன் அவரது தலையில் இரும்புக்கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். மேலும், அங்கே கிடங்க கல்லை தூக்கி ரமேஷின் தலையில் போட்டனர். இதில், சம்பவ இடத்திலே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த கும்பலும் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆர்.கே.நகர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த ரமேஷின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது, கொருக்குப்பேட்டை தண்டவாளம் பகுதியில் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கே பதுங்கியிருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொருக்குப்பேட்டையச் சேர்ந்த அரவிந்த் (வயது 21), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது ரசூதுல்லா(வயது 22) கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார்(30) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூன்று பேரும் இணைந்துதான் ரமேஷை கொலை செய்தனர் என்பதும் தெரியவந்தது.
போலீசார் கொலைக்கான காரணத்தை விசாரித்தபோது, கொலையாளியான உதயகுமாரின் தம்பியான ராஜேஷின் செல்போனை ரமேஷ் திருடியதாகவும், அந்த ஆத்திரத்திலே அவரை நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமார் தாக்கியதாகவும், ஆத்திரத்தில் ரமேஷ் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாகவும் தெரியவந்தது.
மேலும் படிக்க : இன்ஸ்டாகிராமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பணம் பறித்த காதல் மன்னன் கைது
மேலும் படிக்க : Bomb Threat : பெங்களூர் பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்..! 4 நாட்களில் 15வது பள்ளி..! அதிர்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்