கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள சில பள்ளிகளுக்கு கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரில் உள்ள பிஷப்காட்டன் மகளிர் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ந் தேதி விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை பள்ளி நிர்வாகம் நேற்றுதான் பார்த்துள்ளது.


பள்ளி நிர்வாகத்திற்கு இ-மெயில் மூலமாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், பிஷப்காட்டன் மகளிர் பள்ளி வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான 15வது பள்ளி ஆகும்.




இந்த மின்னஞ்சலை கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தது. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் வெளியே தெரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர்.


மேலும், அவர்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால், நேற்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பிஷப்காட்டன் பள்ளி அமைந்துள்ள ரெசிடன்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளிக்கு சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இரண்டு மணி நேரம் தீவிர சோதனை நடத்தினார். ஆனாலும், எந்த மர்மமான மற்றும் வெடிகுண்டு கிடைக்கவில்லை.




ஒரு மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடந்த 4 நாட்களில் மட்டும் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புவது யார்? என்பது இதுவரை தெரியாத நிலையில் போலீசார் 5 சிறப்பு குழுவை அமைத்துள்ளதாக பெங்களூர் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.


மேலும், பெங்களூர் சைபர் கிரைம் காவல்துறையினர் ஒவ்வொரு பள்ளிக்கும் வந்த மின்னஞ்சல்களின் முகவரி, ஐ.பி. முகவரி, இடம் ஆகியவற்றின் மூலம் குற்றவாளிகளை நெருங்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு மிகவும் அச்சம் கொண்டுள்ளனர்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண