புதுச்சேரி அரியாங்குப்பத்தில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக அண்ணன் தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி அரியாங்குப்பம் புறவழிச்சாலை அருகில் சொர்ணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரைஸ்மில் ஒன்று செயல்பட்டு வந்தது. போதிய லாபம் இல்லாததால் அந்த ரைஸ்மில்லை மூடிவிட்டனர். மூடிக்கிடந்த ரைஸ்மில்லை ரெட்டியார்பாளையம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த இளங்கோவன் (64) வாடகைக்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வந்தார்.




இதற்கிடையே இரவு நேரத்தில் அடிக்கடி மினி லாரிகள் அந்த ரைஸ் மில்லுக்கு சென்று வந்தன. இது பொது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவர்கள் அரியாங்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் கடந்த சில நாட்களாக அந்த ரைஸ்மில்லை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் முத்துகுமரன், சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு அதிரடியாக ரைஸ்மில்லுக்குள் புகுந்து சோதனை செய்தனர்.




அப்போது ரைஸ் மில்லுக்குள் போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பெட்டி, பெட்டியாக போலி மதுபானங்களை தயாரித்து வைத்திருந்தனர். இதையடுத்து   அங்கு இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ரெட்டியார்பாளையம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த இளங்கோவன் (வயது 64), பாகூரை சேர்ந்த அழகர் (37), விழுப்புரம் மாவட்டம் கொத்தாம்பாக்கத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர்களான அண்ணன்- தம்பி பிரகாஷ் (28) ஜெயக்குமார் (21)  ஆகியோர்  என்பது தெரியவந்தது.




மேலும் அங்கு 248 அட்டை பெட்டிகளில் வைத்திருந்த 6 ஆயிரம் குவாட்டர் பாட்டில்கள், 39 கேன்களில் இருந்த 2 ஆயிரத்து 277 லிட்டர் எரிசாராயம், அவற்றை தயாரிக்க பயன்படுத்தும் எந்திரங்கள் மற்றும் காலிபாட்டில்கள், முன்னணி நிறுவன லேபிள்கள், தண்ணீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை கலால்துறை தாசில்தார் சிலம்பரசனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ரைஸ்மில்லில் கடந்த 6 மாதமாக போலி மதுபான தொழிற்சாலை இயங்கியது தெரியவந்தது. மேலும் தொழிற்சாலை இயங்குவதற்கு காரணமான முக்கிய குற்றவாளியான அரங்கனூர் கிராமத்தை சேர்ந்த மனோஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண