திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (21). இவர், ஆரணியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். ஆரணி டவுன் சபாஷ்கான் தெருவைச் சேர்ந்தவர் பயாஸ் (24). இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகள் உள்ளனர். தற்போது பயாஸ் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜியுடன் பேஸ்புக் மூலம் பயாஸ் அறிமுகமாகி நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் பாலாஜியின் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பக்கங்களில் உள்ள பாலாஜியின் போட்டோக்களை பயாஸ் பதிவிறக்கம் செய்துள்ளார். பாலாஜி அழகாக இருந்ததால், அவரின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தான் பாலாஜி என்று அறிமுகமாகி, பல பெண்களுக்கு பிரண்ட்ஸ் ரிக்வஸ்ட் கொடுத்து, நண்பராகி உள்ளார்.




இதில், பாலாஜி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் போது, அவரது போட்டோவை வைத்து வேறொருவர் புதியதாக கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே பேஸ்புக்கில் உள்ள செல்போன் நம்பரை வைத்து, தனது போட்டோவை பயன்படுத்துவது யார் என்று விசாரித்துள்ளார். அப்போது தான், அது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பது தெரியவந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டு எச்சரித்ததும் சமூகவலைதளங்களில் இருந்த பாலாஜியின் போட்டோவை பயாஸ் அகற்றி உள்ளார். இதற்கிடையே, சில மாதங்களுக்குபின் மீண்டும் பயாஸ், பாலாஜியின் போட்டோவை பயன்படுத்தி திருவண்ணாமலை, சென்னை, திருப்பத்தூர், மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, வேலூர், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்களுடன் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் சேட் செய்து வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்களிடம் ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் செய்து பேசி உள்ளார்.



அதில், பல பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும் பழகி பணம் பறித்துள்ளார். இந்நிலையில், பாலாஜி சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது தனது போட்டோவை மீண்டும் பயாஸ் பயன்படுத்தி பல பெண்களிடம் சேட் செய்து வருவது தெரியவந்தது. உடனே இதுகுறித்து பாலாஜி, பயாசை போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். திருப்பூரில் பணியாற்றி வந்த பயாஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான ஆரணிக்கு வந்துள்ளார். இதையறிந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்குச் சென்று பயாசின் செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயாஸ் புதிய கணக்குகள் தொடங்கி அதில் பாலாஜியின் போட்டோவை வைத்து பல பெண்களுடன் ஆபாசமாக சேட்டிங் செய்து பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டிருப்பதும் தெரியவந்தது. அதனை பார்த்து, அதிர்ச்சியடைந்த பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள், பயாசை நேற்று முன்தினம் இரவு ஆரணி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இது குறித்து பாலாஜி டவுன் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிந்து பயாசை கைது செய்து, ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் போளூர் சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட பயாஸ், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் அனுப்பியும், காதல் வலை வீசியும் லட்சக்கணக்கில் பணம் பறித்தும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் எத்தனை பெண்களை அவர் ஏமாற்றி உள்ளார்  என்பது தெரியவந்துள்ளது.