கர்நாடகாவில் ஐ.டி.துறையில் வேலை பார்த்த ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பண்ணை மூலம் வருவாய் ஈட்டத்தொடங்கி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் இந்த கழுதை பண்ணை திறக்கப்பட்டுள்ளது.  மங்களூருவில் இருந்து 37 கிமீ தொலைவில் உள்ள பர்லட்கா கிராமத்தில் அமைந்துள்ள கழுதைப்பண்ணையின் உரிமையாளராக 42 வயதுள்ள சீனிவாச கவுடா உள்ளார். விவசாய குடும்பத்தை சார்ந்த இவர் ராமநகர் மாவட்டம் கனகபுராவை பூர்வீகமாக கொண்டவர். 


இந்தியாவின் மூன்றாவது கழுதை பண்ணை


கழுதை பண்ணைகளை பொறுத்தவரை கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாக்குளம் மற்றும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கழுதை பண்ணை உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் மூன்றாவது கழுதை பண்ணையை கர்நாடகாவில் அமைத்துள்ளார் சீனிவாச கவுடா. பி.ஏ பட்டதாரியான தான் ஐடி நிறுவன வேலையை விட்டுவிட்டு கடந்த 2020ஆம் ஆண்டு ஈராவில் 2.3 ஏக்கர் பரப்பளவில் ஐசரி பண்ணைகள், ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையத்தைத் தொடங்கியதாக கூறும் சீனிவாச கவுடா, ஆடு வளர்ப்பு தொடங்கி, பண்ணையில் ஏற்கனவே முயல்களும் கடக்நாத் கோழி ஆகியவற்றை வளர்த்து வருவதாக கூறுகிறார். 


இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: ஆம் கழுதை வளர்ப்பிலும் சாதித்து காட்டலாம்; முன்னுதாரணமாக விளங்கும் நெல்லை பட்டதாரி இளைஞர்


கேலிகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட கழுதை பண்ணை 


சலவை இயந்திரங்கள் மற்றும் கைத்தறி துவைக்க பிற தொழில்நுட்பங்களின் வருகையால் கழுதை இனங்கள் சலவை செய்பவர்களால் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், கழுதை இனங்கள் குறைந்து வருவதாக தெரிவித்த சீனிவாச கவுடா,  தனது கழுதை பண்ணை யோசனையை உறவினர்களிடம் தெரிவித்தபோது, பலர் கேலி செய்ததாக கூறும் அவர், “நான் இங்கு 20 கழுதைகளுடன் கழுதைப் பண்ணையைத் தொடங்கினேன். எனக்கு 12 பெண் கழுதைகளிடம் இருந்து ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு லிட்டர் பால் கிடைக்கிறது (ஒவ்வொரு பெண் கழுதையும் அரை லிட்டர் பால் கொடுக்கும். சுவையான தன்மையும் மருத்துவ குணமும் கொண்ட கழுதை பாலுக்கு சந்தையில் அதிகவிலை கிடைப்பதாக கூறுகிறார்.  


30 மில்லி பால் 150 ரூபாய்க்கு விற்பனை


வணிக வளாகங்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகளில் 30 மி.லி கழுதை பாலை 150 ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறும் கவுடா, அழகுசாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் தனது கழுதை பாலை 17 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “கழுதை பால் விற்பனையின் மூலம் லிட்டருக்கு ₹5,000 முதல் ₹7,000 ரூபாயும், சிறுநீர் விற்பனை மூலம் ₹500 முதல் ₹600 வரையும் ஆர்கானிக் எருவாக கழுதை சாணம் கிலோ ₹600 முதல் ₹700 வரையும் விற்பனை செய்வதாக கூறும் கவுடா, 30, 60, 100 மற்றும் 200 மில்லி பாட்டில்களில் கழுதை பாலை அடைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார். 


கழுதைப்பாலை பொதுமக்கள் மருத்துவம் சார்ந்த பல விஷயங்களுக்கு பயன்படுத்தி வருவதே கழுதைப்பாலுக்கு இத்தனை கிராக்கி ஏற்படக்காரணம் எனக் கூறப்படுகிறது.