குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக்காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.


ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மே மாதம் 24ம் தேதியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கல்லணையிலிருந்து 27ம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆறு, வாய்க்கால்களில் வர தொடங்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர்.




இதை ஒட்டி தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே விவசாயிகள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு வருகை தந்து விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக செல்லப்பன்பேட்டை பகுதியில் உள்ள வயலுக்கு சென்று அங்கும் வழிபாடு நடத்தினர். பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர். இதற்கு பொன்னேர் பூட்டுதல் என்று பெயர். கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கடைமடை வரை சென்று சேர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.


இதன்படி தஞ்சை மாவட்டத்தில் 43 ஆயிரம் ஹெக்டேருக்கு குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை சுமார் 26 ஆயிரம் ஹெக்டேர் வரை நடவுப்பணிகள் முடிந்துள்ளது. 16 ஆயிரம் ஹெக்டேரில் நாற்றங்கால் பணிகள் நிறைவடைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு 363 டன் விதை நெல் தேவை. இதில் 275 டன் கொடுக்கப்பட்டுள்ளது.




உரம் 4456 டன் யூரியா, 1284 டன் டிஏபி, 712 டன் பொட்டாஷ் இருப்பு உள்ளது. இதனால் உரம், விதை நெல்லுக்கு தட்டுப்பாடு கிடையாது. இதனால் இந்தாண்டு குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் டிராக்டரை கொண்டு வயலை உழுது குறுவை சாகுபடிக்கு தயார்படுத்தி வருகின்றனர்.


இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும். மேலும் கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று  பொன்னேர் பூட்டி வழிபாடு நடத்தப்பட்டது. தடையின்றி தண்ணீர், உரம் கிடைத்தால் இலக்கை மிஞ்சி சாகுபடி செய்யப்படும் என்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண