2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 31-ல் இருந்து 2021 செப்டம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2021 டிசம்பர் 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
வருமான வரி சட்டம், 1961-ன் கீழ் 2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் மற்றும் பல்வேறு தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் வரி செலுத்துவோர் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, 2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் மற்றும் பல்வேறு தணிக்கை அறிக்கைகளுக்கான கடைசி தேதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. அதன்படி
1. 2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 31-ல் இருந்து 2021 செப்டம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2021 டிசம்பர் 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. 2020-21-ம் வருடத்திற்கான தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 30-ல் இருந்து 2021 அக்டோபர் 31 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 15 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. சர்வதேச பரிவர்த்தனை அல்லது சட்டத்தின் 92ஈ பிரிவின் கீழ் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட நபர்கள் 2020-21-ம் வருடத்திற்காக சமர்ப்பிக்க வேண்டிய கணக்காளரிடம் இருந்து பெற்ற அறிக்கைக்கான கடைசி தேதி 2021 அக்டோபர் 31-ல் இருந்து 2021 நவம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. 2021-22ஆண்டுகளுக்கான தாமதிக்கப்பட்ட வருமான வரி கணக்கு மற்றும் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 டிசம்பர் 31-ல் இருந்து 2022 ஜனவரி 31 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 மார்ச் 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி இணையதளத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து வரி நிபுணர்கள், இதர பங்குதாரர்கள் மற்றும் இன்போசிஸ் உடன் நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. வருமான வரி துறையின் புதிய இணையதளம் 2021 ஜூன் 7 அன்று தொடங்கப்பட்டது. அன்றிலிருந்தே அதன் செயல்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.வரி செலுத்துவோர், வரி நிபுணர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்த குறைகளை தொடர்ந்து, இணையதளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்திடம் இது குறித்து நிதி அமைச்சர் முறையிட்டு, குறைகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தினார்.
இருந்தபோதிலும் இணையதளத்தில் சிக்கல்கள் தொடர்ந்து பயனர்களுக்கு சிரமம் ஏற்பட்டதால், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தின் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிசெலுத்துவோருக்கு முறையான சேவை வழங்குவது அரசின் முக்கிய முன்னுரிமை என்றும், வரி செலுத்தும் முறையை எளிதாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இணையதளத்தில் உள்ள குறைகள் குறித்து கவலை தெரிவித்த அவர், பிரச்சினைகளை விரைந்து சரிசெய்யுமாறு இன்போசிஸ் நிறுவனத்தை கேட்டுக்கொண்டார்.
மேலும், வாசிக்க:
Navil Noronha Profile: அதிக நெட்வொர்த் உள்ள புரபெஷனல் சி.இ.ஒ யார்? பின்னணி என்ன?