தற்போது வேலை கிடைக்கவில்லை, இருக்கும் வேலை நிலைக்குமா என தெரியாது, பிடித்த சம்பளம் மீண்டும் முழுமையாக கிடைக்குமா என்பது தெரியாது என வேலை விஷயத்தில் பல நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இருந்தாலும் இவையெல்லாம் தற்காலிக சூழலே. இன்னும் சில மாதங்களுக்கு பிறகு நிலைமை மாறும். அப்போது கூடுதல் சம்பளத்துக்காக வேலை மாறலாமா என தோன்றும்.
ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் சூழல் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் தற்போது அதற்கான சாத்தியமே இல்லை என்பதுதான் எதார்த்தம். இந்த நிலையில் வேலை மாறுவது என்பது கார்ப்பரேட் வாழ்க்கையில் முக்கியமான முடிவு. இதனை எப்படி எடுக்க வேண்டும் என்னும் குழப்பம் அனைவருக்கும் ஏற்படும்
வேலையில் உருவாகும் முக்கியமான 10 சிக்கல்களை பட்டியலிட்டு அதற்கு எப்படி முடிவெடுக்க வேண்டும் என ஷிவ் சிவகுமார் `தி ரைட் சாய்ஸ்’ என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டிருகிறார். நோக்யா, பெப்சிகோ, உள்ளிட்ட முக்கியமான குழுமங்களில் தலைமை பொறுப்புகளில் இருந்தவர். தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தில் இருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான விஷயங்களை நாம் பார்ப்போம்.
பணம் முக்கியம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு கல்லூரியின் வெற்றியை கூட மாணவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை அடிப்படையாக வைத்துதான் முடிவெடுக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யும்போது பணம் முக்கியம். ஆனால் பணம் மட்டுமே முக்கியமல்ல.
ஒரு நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளத்தில் இருந்து வெளியேறுவோரிடம் பேசினால் அவர் வெளியேறியதற்கு காரணம் பணம் மட்டுமில்லை. வேறு சில காரணங்களை சொல்லுவார்கள். அதே காரணத்தைதான் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்போதும் செய்ய வேண்டும். பணிப்பாதுகாப்பு இருக்கிறதா, வேலை, குடும்பம் இரண்டையும் சரி செய்ய முடிகிறதா. நிறுவனத்தில் வளர்சிக்கான வாய்ப்பு இருக்கிறதா, நல்ல நிர்வாகமா, போதுமான அங்கிகாரம் கிடைக்கிறதா உள்ளிட்டவை சரியில்லாததால் வெளியேறுகிறார்கள்.
ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்போதும் சம்பளம் தவிர மேலே உள்ள விஷயங்களை பார்த்தே முடிவெடுக்க வேண்டும் என சிவகுமார் குறிப்பிடுகிறார்.
இதனை உளவியல் அடிப்படையில் மேலும் இரண்டாக பிரிக்கிறார் சிவகுமார். இந்தியர்கள் பொதுவாக 20 சதவீதம் அளவுக்கு சேமிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் 11 சதவீதம் அளவுக்கு மட்டுமே சேமிக்கிறார்கள். அதனால் கேரியரின் ஆரம்பகாலகட்டத்தில் பணத்தை விட, எங்கு அதிகம் கற்றுக்கொள்ள முடியுமோ, எங்கு வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்குமோ அந்த வாய்ப்பினை தேர்ந்தெடுக்கலாம் என சிவகுமார் கூறுகிறார்.
ஒருவேளை கார்ப்பரேட் வாழ்க்கையில் நடுபகுதியில் இருந்தால் குழந்தைகள் இருக்கும், வீட்டுக்கடன் இருக்கும், இதர சமூக பொறுப்புகள் இருக்கும். ஆனால் இளைஞர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லாத சமயத்தில் சம்பளத்தை செலவு செய்வது, கடன் வாங்கு மொபைல் சுற்றுலா செல்வது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் ஆரம்ப்பட்டத்தில் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது நல்லது. தற்போதைய இளைஞர் instant gratification எதிர்பார்க்கிறார்கள். அதனை எதிர்பார்க்காமல் பெரிய கேரியருக்கு அடித்தளம் இருக்கும்படியான வேலையை தேர்ந்தெடுப்பது நல்லது என குறிப்பிடுகிறார்.
ஆனால் இதற்கு நேர்மாறான கருத்தும் சந்தையில் இருக்கிறது. சில பேராசிரியர்களுடன் உரையாடும்போது சில மாற்றுக்கருத்துகளை தெரிவித்தனர். தற்போதைய சூழலில் வேலையில் இருக்கும் வரை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எதார்த்தம். இரண்டாவது முதல் வேலையில் கிடைக்கும் சம்பளத்தை பொறுத்துதான் அடுத்தடுத்த சம்பள உயர்வு இருக்கும். திடீரென அதிரடியான சம்பள உயர்வு கிடைக்காது. கடைசி சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் உயர்த்துவார்கள். அதனால் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் கவனித்தாலும் சம்பளமும் முக்கியம். அதே சமயத்தில் இளைஞர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள். கடன் கிடைக்கிறது என்பதற்காக சுற்றுலா செல்பவர்கள், மொபைல் அப்டேட் செய்பவர்கள் இருக்கிறார். செலவுகளை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று அந்த பேராசிரியர் தெரிவித்தார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஆரம்பகால கட்டத்தில் வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கும் நிறுவனமாக இருக்க வேண்டும். அங்கு கூடுதல் சம்பளம் கிடைத்தால் ஓகே. சுமாரான சம்பளம் இருந்தாலும் அடித்தளத்தை உருவாக்க வேண்டும். இரண்டாவது செலவுகளை விட சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
Srilankan Crisis | சுற்றுலா சரிவு.. தேயிலை தொய்வு.. இலங்கையில் புதிய சிக்கல்..!