இந்தியாவில் அதிக நெட்வொர்த் உள்ள புரபெஷனல் சி.இ.ஒ ( நிறுவனர் கிடையாது) யாராக இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? டாடா சன்ஸ் சந்திரசேகன் கிடையாது, ஹெச்டிஎப்சி வங்கியில் 26 ஆண்டு காலம் இருந்த ஆதித்யா பூரி கிடையாது. ஹெச்.டி.எப்.சி. தலைவர் தீபக் பரேக் கிடையாது. எல் அண்ட் டியில் நீண்ட காலம் தலைவராக இருந்த ஏ.எம்.நாயக் கிடையாது. இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்.சி.எல் என டெக்னாலஜி நிறுவனங்களின் தலைவரும் கிடையாது. புதிதாக தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி கிடையாது. வழக்கமான ஐஐடி அல்லது ஐஐஎம்-ல் படித்தவர் கிடையாது. இத்தனை வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் யாராக இருக்கும்.? அவர் டிமார்ட் தலைமைச் செயல் அதிகாரி நவில் நொரோன்ஹா.


யார் இவர்?


மும்பையில் பிறந்தவர். நர்ஸி  மான்ஜி கல்லூரியில் எம்.பி.ஏ படித்தவர். ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ராதாகிருஷணன் தமானி 2001-ம் ஆண்டு டிமார்ட் நிறுவனத்தை தொடங்குகிறார். இவரது அறிமுகம் கிடைத்த பிறகு  2004-ம் ஆண்டு டிமார்ட் நிறுவனத்தின் பிஸினஸ் பிரிவு தலைவராக பொறுப்பு ஏற்கிறார். 2007-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.


டி மார்ட் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்த நிறுவனத்தின் பிஸினஸ் யுத்திதான். சப்ளையளர்களுக்கு விரைவில் பணத்தை கொடுப்பதால், சப்ளையர்கள் கூடுதல் தள்ளுபடி சலுகையை டிமார்ட் நிறுவனத்துக்கு வழங்குகிறார்கள். இதனால் டிமார்ட் லாப வரம்பு மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது.



தற்போது 46 வயதாகும் இவரிடம் 2.03 சதவீத டி-மார்ட் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.5100 கோடிக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. (இது தவிர கடந்த சில ஆண்டுகளில் சம்பளம் மற்றும் பங்குகள் விற்பனை மூலம் ரூ.100 கோடி வருமானம் ஈட்டியிருப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.) கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த பங்குகள் சுமார் 116 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தலைமைச் செயல் அதிகாரியான நொரோன்ஹா மட்டுமல்லாமல் தலைமை நிதி அதிகாரியான ராமகாந்த் பகேதி வசம் உள்ள பங்குகளின் மதிப்பும் ரூ.1000கோடிக்கு மேல் இருக்கும்.


2017-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அப்போது இவர் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.900 கோடி. கொரோனாவுக்கு முன்பாக இவர் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.3100 கோடியாக இருந்தது நினைவுகூறத்தக்கது. தற்போது டி மார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.55 லட்சம் கோடியாக இருக்கிறது. இதில் நிறுவனர் தமானி மற்றும் குடும்பத்தின் வசம் சுமார் 75 சதவீத பங்குகள் உள்ளன.


போட்டி நிறுவனங்களை விட குறைவான இடத்திலே கடை செயல்படுகிறது, ஆனால் கடை மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம். அதேபோல போட்டி நிறுவனங்கள் டிமார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பை நெருங்ககூட முடியாது. `லாயல்டி திட்டங்களை டிமார்ட் நம்புவதில்லை. சப்ளையர்களுக்கு விரைவாக பணம் கொடுப்பதால் எங்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இதனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். மேலும் அத்தியாவசிய பொருட்கள் மூலமாக அதிக லாபம் ஈட்டவேண்டும் என நாங்கள் நினைப்பதில்லை.



அத்தியாவசிய பொருட்களில் குறைவான விலை இருக்கும்போது அதிக மக்கள் வருவார்கள். அதனால் வேறு பொருட்கள் மூலம் (காலணி, பொம்மை, அலங்காரம்) எங்களின் லாப வரம்பை உயர்த்திகொள்கிறோம் என சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில் நொரோன்ஹா தெரிவித்திருக்கிறார். பொதுவாக தமானி மற்றும் நொரோன்ஹா மீடியாவை சந்திப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.          


வழக்கமான மளிகைகடை போல தோன்றும். ஆனால் செயல்படுத்துவதில் உள்ள வித்தியாசம் காரணமாக டிமார்ட் மாறுபடுகிறது. அதில் முக்கிய பங்கு வகித்தவர் நொரோன்ஹா. அதற்கான பலனை அனுபவிக்கிறார்.