தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி குறித்து அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. காரணம் என்னவென்றால் நீண்ட நாட்களாக இருந்த பன்வாரிலால் புரோஹித் திடீரென மாற்றப்பட்டதும் , இந்த பெயரை பெரிய அளவில் கேள்விப்படாததுமே.


தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கவிருக்கும் ஆர்.என்.ரவி பீகாரில் பிறந்தவர். கேரளா பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. ஆரம்ப காலத்தில் கேரள மாநில பணிகளில் இருந்த ரவி, சில ஆண்டுகளுக்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டார். அங்கு Oraganised Crime unit எனப்படும் குழுவாக இணைந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து தடுக்கும் பிரிவிலும் ஊழல் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார். கண்காணிப்பு பணி பிடித்துப் போக, உளவுத்துறையில் சேர்ந்தார் ரவி. மத்திய அரசின் பல்வேறு பணிகளில் பணியாற்றியுள்ள ரவி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் Good Book ல் இடம்பெற்றிருந்த அதிகாரிகளில் மிக முக்கியமானவர்.




ஐபிஎஸ் அதிகாரியான ரவி, காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக உளவுத்துறை அதிகாரியாக. இந்த அனுபவம் அவருக்கு பல வழிகளில் கை கொடுத்தது. ராணுவத்துக்கு பல நேரங்களில் தூதுவராகவும் பேச்சுவார்த்தை நடத்தும் நபராகவும் இருந்திருக்கிறார். பெரும்பாலும் வடகிழக்கு தொடர்பான விஷயங்களை கவனித்து வந்ததால், ரவியை வடகிழக்கு நிபுணர் என்றும் மத்திய அரசில் அழைப்பார்கள்.


தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித் தோவலும் ஆர்.என்.ரவியும் உளவுத்துறையில் ஒன்றாக பணியாற்றியவர்கள். உளவுத்துறை அதிகாரியாக அஜித் தோவல் இருந்தபோது , வடகிழக்கு பிரிவு அதிகாரிகள் குழுவில் இருந்தார் ரவி. அப்போதே இருவருக்கும் வேலை ரீதியாக நல்ல உறவு இருந்தது. பின்னர் ரவி காஷ்மீர் சென்ற போதும் அஜித் தோவல் அவரோடு நெருங்கி பணியாற்றினார். கடைசியாக உளவுத்துறையின் சிறப்பு இயக்குனராக இருந்த ரவி, 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


2014ம் ஆண்டு மே மாதம் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜக. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். நாகாலாந்தில் தொடர்ந்து வந்த குழப்பத்தை போக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது மத்திய அரசு. அந்த பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக இருந்தார் அஜித் லால். அவரது பதவிக்காலம் முடிந்த போது, தாங்கள் மிகவும் புதிய அரசாக இருப்பதால் புதிய தலைவரை நியமிக்க வேண்டாம் என்றும் நாகாலாந்து பிரிவினைவாத அமைப்புகளோடு உள்ள சிக்கலை புதிய நியமனம் மேலும் சிக்கலாக்கலாம் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் அஜித் லாலை தற்போதைக்கு தலைவராக நீடிக்க சொல்லலாம் என்று பரிந்துரைத்தார்.


ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து பறந்து வந்தது ஒரு ஆர்டர். ஆர்.என்.ரவியை இந்திய அரசின் பிரதிநிதியாக , நாகா அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவராக நியமிக்கிறோம் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆடிப்போனது உள்துறை அமைச்சகம். ஏனெனில் அதுவரை உள்நாட்டு பிரச்னைகளில் பிரதம அமைச்சகம் அமைச்சர் மூலமாக அன்றி நேரடியாக தலையிட்டதில்லை. ஆர்.என்.ரவியின் நியமனம் அப்படிப்பட்ட முறையை மாற்றி அமைத்தது. காரணம் அஜித் தோவல். ஆம், பழையை நட்பை புதுப்பித்தார். வடகிழக்கோடு ஈடு கொடுக்க ரவியால் மட்டுமே முடியும் என நம்பினார் தோவல். ஓகே சொன்னார் மோடி.




இதன் காரணமாகத்தான் நாகாலந்து அமைதி பேச்சுவார்த்தை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் மத்திய அரசு நினைத்தது போல நாகாலாந்து பேச்சுவார்த்தை எளிதில் முடியவில்லை. நாகாலாந்தை சேர்ந்த அனைத்து குழுக்களுக்கும் அழைப்பு விடுத்தார். எப்போது அழைத்தாலும் பேச வருவதாக சொன்னார். சுமார் 30 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. நாகாலாந்து போராட்டக்குழுவை சேர்ந்த NSCN – IM அமைப்போடு அமைதி 2015ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரவி. இதற்கு மற்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரவி ஒட்டுமொத்த போராட்டத்தை ஒடுக்க நினைப்பதாகவும் மக்களுக்குள் பிரிவினை உண்டாக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


ஆனால் பெரும்பாலான குழுக்களை உள்ளடக்கிய அமைப்பான NSCN – IM உடன் முழுமையான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மற்ற யாரும் தம்முடன் பேசவில்லை என்று ரவி பதிலளித்தார். இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு நாகாலாந்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. அதன் பிறகு 2017ம் ஆண்டில் இன்னும் சில அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரவி.




ஒரே ஆண்டில் ஓயாத பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக முடித்த ஆர்.என்.ரவிக்கு ஆளுநர் பதவி தேடி வந்தது. எந்த மாநிலத்துக்கு அமைதி ஒப்பந்தம் செய்ய அனுப்பப்பட்டாரோ அதே மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் ரவி. இந்நிலையில்தான் இப்போது மாற்றப்படுவார், இதோ மாற்றிவிட்டார்கள் என பேசப்பட்டு வந்த பன்வாரிலால் புரோஹித்தின் மாற்றம் நடக்க, தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ரவி.


கண்காணிப்பிலும் உளவிலும் வல்லவரான ஆர்.என்.ரவிக்கு தமிழகத்தில் காத்திருக்கும் அசைண்மென்ட் என்ன என்பதை காலம் சொல்லும்.