Tamil Nadu Budget 2025 For Space Science: விண்வெளித்துறையில் தமிழர்கள் பலர் சாதனை புரிந்து வரும் நிலையில், வருங்கால இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும், தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இது விண்வெளி துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செயற்கைக்கோள் சோதனை:
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். அப்போது, விண்வெளித் துறையில் தமிழ்நாட்டினரை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
விண்வெளி தொடர்பாக பட்ஜெட்டில் 2025-26ல் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது “ தமிழ்நாட்டில் அண்மையில் உருவாக்கப்பட்ட விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் உலகளவில் தனி முத்திரை பதித்து வருகின்றன.
அவ்வகை விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்திட விண்வெளித் தொழில்நுட்ப நிதியாக (Space Tech fund) 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், செயற்கைக்கோள் சோதனைகளுக்குத் தேவையான முன்மாதிரித் தயாரிப்பு ஆய்வகம், விண்வெளித் தரத்திற்கேற்ற பரிசோதனை வசதிகள், தொழில் வளர் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வசதிகள் சென்னையில் அமைக்கப்படும்.
Also Read: TN Budget: உலகெங்கும் ஒலிக்கப்போகும் தமிழ்! பட்ஜெட்டில் பணத்தை கொட்டும் தமிழ்நாடு அரசு: இவ்வளவா.!
Also Read: இஸ்ரோவின் SPADEX திட்டம் வெற்றி: விண்வெளியில் பறக்க தயாராகும் மனிதன்!
Also Read: TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
சென்னை அறிவியல் மையம்:
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைய தலைமுறையினருக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கோடு, சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சென்னை அறிவியல் அமையம் உருவாக்கப்படும்.
இம்மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் (STEM) புலங்கள் மட்டுமன்றி விண்வெளி வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் இடம்பெற்றிருக்கும் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள் ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் வானவியல் நகர்வுகளை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை அனுபவ அரங்குகள் அறிவியல் மாநாட்டுக் கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமைப் புல்வெளிகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட சென்னை அறிவியல் மையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்பானது அறிவியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதோடு, மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.