தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாடு பட்ஜெட்டில் சேலம் மாவட்டத்திற்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 


மிக அதிவேக ரயில் திட்டம்:


புதுடெல்லியில் இருப்பதை போன்று தமிழ்நாட்டிலும் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே அமைப்பினை, சேலம் - கோயம்புத்தூர், சென்னை - திண்டிவனம், சென்னை - வேலூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் விரிவான சாத்தியக்கூறிகள் ஆய்வு செய்யப்படும் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 


இதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு, 185 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த போக்குவரத்து அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், நீண்ட தூரத்தை ஒரு சில நிமிடங்களில் கடந்து விட முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.


சேலத்தில் புதிய நூலகம்:


சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நூலகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக சேலத்தில் சுமார் ஒரு லட்சம் புத்தகங்களுடன் கூடிய சிறப்பு நூலகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதனால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைப்போல், கடலூர், நெல்லை ஆகிய மாநகரங்களிலும் ஒரு லட்சம் புத்தகங்களுடன் கூடிய சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் படைப்பகம்:


சேலம் மாநகராட்சியில் சுமார் ஐந்து கோடி மதிப்பீடு அதிநவீன வசதிகளுடன் கூடிய "முதல்வர் படைப்பகம்" அமைக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம் உள்ளிட்ட 30 இடங்களில் "முதல்வர் படைப்பகம்" அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தெலுங்கனூரில் தொல்லியல் அகழாய்வு:


சேலம் மாவட்டம் தெலுங்கனூரில் தொல்லியல் அகழாய்வு நடத்துவதற்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன்மூலம் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும் என வரலாற்று ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஆவின் பால் நிறுவனம் நவீனமயமாக்குதல்:


சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு பால்வளத் துறை சார்பில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை மேம்படுத்தும் விதமாக சேலம் ஆவின் பால் நிறுவனம் நவீனமாக்கப்படும். ஆவின் பால் நிறுவனங்களில் உள்ள சாதனங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


அன்புச் சோலை மையம்:


சேலம் மாநகராட்சியில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அன்புச்சோலை மையங்கள் சேலம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளையும் மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.


 ‌