இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அன்டாக்கிங் பரிசோதனையை இன்று வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது சந்திரயான் 4 மற்றும் ககன்யான் மற்றும் விண்வெளி நிலையம் அமைத்தல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு பாதை அமைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அண்டாக்கிங் வெற்றி
செயற்கைக்கோள் 1 ( SDX-1 ) மற்றும் செயற்கைக்கோள் 2 ( SDX-2 ) ஆகிய இரண்டிற்கும் இறுதி டிகாப்சர் கட்டளை வழங்கப்பட்டது, இதையடுத்து இரண்டு செயற்கைக்கோள்களையும் சீராகவும் துல்லியமாகவும் பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டும் செயற்கைக்கோள்களும் பிரிந்து செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த காட்சியானது, விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மேம்பட்ட திறன்களைக் காண்பிக்கும் வகையில், பரிசோதனையின் வீடியோ இருக்கிறது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து:
மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ளதாவது, “ ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவிற்கு டாக்கிங்கை ( இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்தல் ) மற்றும் அன்டாக்கிங் ( 2 செயற்கைக்கோள்களை பிரித்தல் ) பணியை செய்துள்ளன.
இது லட்சிய திட்டமான சந்திரயான் 4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி பயணங்களுக்கும் வழி வகுக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்பேடக்ஸ் திட்டம் மூலம் 2 செயற்கைக்கோள்களை இணைத்து பரிசோதனை முயற்சியில் வெற்றியடைந்துள்ளது. உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே, இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்நிலையில் ,நான்காவது நாடாக அந்த சாதனையை படைத்திருக்கிறது இந்தியா.
Also Read: Lunar Eclipse: சிவப்பாக மாறப்போகும் இரவு: வருடத்தின் முதல் சந்திர கிரகணம்: எப்போது?
ஸ்பேடக்ஸ் திட்டம்:
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் போற்றப்படும் SpaDeX திட்டமானது, விண்வெளியில் தனித்தனியே சுற்றி வரும் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் திட்டமாகும். மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பம், செயற்கைக்கோள் சேவை மற்றும் எதிர்காலப் பணிகளான ககன்யான் திட்டம் மற்றும் இந்தியாவிற்கான விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்றவற்றில் நாட்டின் திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2035க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் அமைப்பதற்கும் SpaDeX முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Also Read: சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?