தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பும் வகையிலும், தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு பட்ஜெட்டில் இன்று வெளியிட்டுள்ளது.  இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது, உலகெங்களிலும் புத்தக கண்காட்சி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 


45 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு:


உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் உரைத்திடும் உன்னத வாழ்வியல் நெறிகளை உலகெங்கும் பரப்புவது நம து தலையாய கடமையாகும். காலம்தோறும் அறிஞர்களின் பெருமுயற்சியாலும், பல கல்வி நிறுவனங்களின் முன்னெடுப்பினாலும், இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும் 35 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த -சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் ஆசிய ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பேசப்படும் 28 வெவ்வேறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்திட பன்னாட்டுப் பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, 45 பல்வேறு உலக மொழிகளில் கூடுதலாக மொழிபெயர்க்கப்படும்போது, ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட 193 உலக நாடுகளின் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையினை திருக்குறள் பெற்றிடும். வான்புகழ் வள்ளுவத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கங்கொண்ட இந்த மொழிபெயர்ப்புத் திட்டத்தை, பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் எதிர்வரும் 'மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றிட 133 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




உலக மொழிகளில் தமிழ் இலக்கியம்:


இது மட்டுமன்றி தலைசிறந்த தமிழ் இலக்கிய நூல்களை உலக மொழிகளில் கொண்டு செல்லும் மகத்தான முயற்சியின் முதற்படியாய் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்நூறு தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திடும் மாபெரும் திட்டத்தினை இருபதுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பன்னாட்டு மற்றும் இந்திய அளவிலான முன்னணி பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கூட்டு வெளியீடாகச் செயல்படுத்தும்.  அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டிற்கு நூறு நூல்கள் வீதம் ஐந்நூறு ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பிக்கும் இம்முயற்சிக்கு முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Also Read: TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...


ஓலைச்சுவடிகள் மின் பதிப்பாக்கம் 


நாள்தோறும் மாறிக் கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், மருத்துவம். பொறியியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப நூல்களை, துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி இயந்திர மொழியாக்கத் (Machine Translation) தொழில்நுட்பத்தின் துணையுடன் தமிழ் மொழியில் உடனுக்குடன் பதிப்பாக்கம் செய்திட 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மேலும், பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் அறிய ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளின் கையெழுத்துப் பிரதிகளை மின் பதிப்பாக்கம் செய்திட வரும் நிதியாண்டில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


உலகெங்கும் தமிழ் புத்தக கண்காட்சி:


அறிவைப் பரவலாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தப்பட்டு வரும் புத்தகத் திருவிழாக்களை நாடே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கின்றது.


இதன் அடுத்தகட்ட நகர்வாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் புதுதில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா. திருவனந்தபுரம் போன்ற பிற இந்தியப் பெருநகரங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும், குறிப்பாக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களிலும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் இந்த ஆண்டு முதல் நடத்தப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும் தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்குத் தமிழ்மொழி மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களைக் கொண்டு நேரடி வகுப்புகள் நடத்திட, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


உலகத்தமிழ் ஒலிம்பியாட் போட்டி


தமிழ்ச் செம்மொழியின் பெருமையினையும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பினையும் உலகத் தமிழ் இளைஞர்களிடையே பரவிடச் செய்திடும் நோக்கத்தில் தமிழ்நாடு மட்டுமன்றி இதர இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் உலகத் தமிழ் மையங்களில் பயின்றிடும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில், கணினிவழித் தேர்வு முறையில் உலகத்தமிழ் ஒலிம்பியாட் போட்டி இனி ஆண்டுதோறும் நடத்தப்படும். 605 அளவிலான வெற்றியாளர்கள் மட்டுமன்றி. தேசிய மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றிடும் மாணவர்களுக்குமான மொத்தப் பரிசுத் தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கிச் சிறப்பிக்கப்படும்.




மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க வளாகம்:


இந்தியத் திருநாடு பன்மொழிகளின் சங்கமம் என்பதைக் கருத்தில் கொண்டு, உலகின் மிக மூத்த தனிச் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் அகரம் மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த தமிழ்மொழிக்கும் இதர இந்திய மொழிகளுக்குமான மொழியியல் உறவு, தென்னிந்தியப் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் குறித்த பதிவுகள், பாறை ஓவியங்கள் தொடங்கி, கல்வெட்டுகள் அச்சுக்கலை வழியே கணித்தமிழ் வரையிலான தமிழ்மொழியின் நீண்ட பயணம் குறித்த பல அரிய பதிவுகள் உயர் தொழில்நுட்ப வசதியுடன் இந்த மொழிகளின் அருங்காட்சியகம் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.