மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அடுத்த பரசலூர் ஊராட்சி மேலகட்டளை கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லப்பார் அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி பெரும்பாலும் கோயில்கள் கிழக்கு நோக்கியை அமைந்திருக்கும், இக்கோயிலானது வடக்கு நோக்கி சோழர்காலத்தில் கட்டப்பட்டது. சாஸ்தாவின் ரூபங்களில் ஒருவரான குமாரசாஸ்தாவாக வீற்றிருந்து செல்லப்பார் என்ற திருநாமத்துடன் உத்குடிகாசனம் எனும் அமர்ந்த நிலையில் இங்கு சாமி வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
செம்பனார்கோயில் சொர்ணபுரீஸ்வரர், பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலய சுவாமிகளின் எல்லை காவல் தெய்வமாக விளங்கும் செல்லப்பார் ஆலயத்திற்கு விஜயம் செய்த மறைந்த காஞ்சி மாமுனிவர் ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரிய சுவாமிகள் வழிபட்டு குமார சாஸ்தா என்று அழைத்தார். செம்பனார்கோவில், பரசலூர் பகுதியை சேர்ந்த பல்வேறு குடும்பங்களின் குலதெய்வமாகவும் விளங்கி வரும் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் செய்ய இவ்வூர் முக்கியஸ்தர்கள் முடிவெடுத்து கோயில் திருப்பணிகளை செய்து வந்தனர்.
தேர்தல் முடிந்து கொரோனா கட்டுப்பாடுகளா? என்ன சொல்கிறார் சுகாதாரத் துறை செயலாளர்!
கோயில் திருப்பணிகள் முழுவதும் முடிந்த நிலையில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் செல்லப்பார் சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனை செய்யப்பட்டு, புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை வழிமுறைகளை பின்பற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை : மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது புதிய டாஸ்மாக் கடை!
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவை அடுத்து மயிலாடுதுறை காவல் துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இன்று முதல் நாற்பத்தி எட்டு தினங்களுக்கு மண்டல பூஜை இக்கோயிலில் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள முடியாத பக்தர்கள் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
தூத்துக்குடியில் இரவு விமான சேவை எப்போது - விமான நிலைய இயக்குநர் விளக்கம்