தமிழ்நாட்டில் 21ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். மேலும் கோயிலுக்கு சாமி வழிபாடும் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”தமிழகத்தில் 21ஆவது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது, இதுவரைக்கும் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக 9.67 கோடி பேருக்கு தடுப்பூசி செல்லுப்பட்டுள்ளது, முதல் தவணை தடுப்பூசி 90.75 விழுக்காடும், இரண்டாவது தவணை தடுப்பூசி 70.02 விழுக்காடும் செலுத்தி சராசரியாக 70 விழுக்காடை தாண்டி உள்ளோம். மேலும், மயிலாடுதுறை, ராணிபேட்டை, தென்காசி போன்ற சில மாவட்டங்களில் இன்னமும் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் உள்ளது.
உலகளவில் தடுப்பூசி போட்டததால்தான் மூன்றாம் அலை கணிசமாக குறைய தொடங்கி உள்ளது, ஆகையால் தயக்கம் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.
தடுப்பூசிக்கு எதிராக கருத்து கூறுவது தவறானது. தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் இறப்பு விகிதங்கள் அதிகரித்து காணப்பட்டது. தற்போது தடுப்பூசி செலுத்தியதை தொடர்ந்து இறப்பு விகிதங்கள் குறைந்ததை தடுப்பூசிக்கு எதிரானவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தடுப்பூசிக்கு எதிரானவர்களை சட்டப்பூர்வமாக அணுக அதிகாரம் உள்ளது. ஆனால் தடுப்பூசிக்கு எதிரானவர்களை சமாதானம் செய்து புரியவைக்க முயற்சி செய்கிறோம்’ என்றார்.
தேர்தலுக்கு பின்பு கொரோனா வைரஸ் தொட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தற்போது அளிக்கப்பட்டுள்ளதற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நோயின் எண்ணிக்கையும் பரவலையும் பொறுத்தே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதேபோன்று தொடர்ந்து மக்கள் மாஸ்க் அணிந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளை சுகாதாரத் துறை முதற்கொண்டு யாரும் விரும்பவில்லை. பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாதவாறு, தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு வழி முறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என பிரதமரும், தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறையைவிட இந்த முறை மருத்துவ கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்