இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தமிழில் வலையோசை கலகலவென உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 92. பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மராத்தியை பூர்வீகமாக கொண்ட லதா மங்கேஷ்கரின் குரலில் தமிழில் சில பாடல்களே வந்துள்ளது. ஆனாலும், அவரது குரலுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.
1952ம் ஆண்டு இந்தியில் வெளியான ஆண் என்ற திரைப்படம் தமிழில் ஆண் முரட்டு அடியாள் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசானது. அந்த படத்தில் இடம்பெற்ற “இழந்தேன் உன்னை அன்பே” “நகரு நகரு” “பாடு சிங்கார பாடலை” “இன்று எந்தன் நெஞ்சில்” ஆகிய பாடல்களை தமிழில் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். இதன்மூலம் சுதந்திரம் கிடைத்த 5 ஆண்டுகளில் தமிழில் பாடகியாக லதா மங்கேஷ்கர் அறிமுகமாகியிருந்தார்.
1955ம் ஆண்டு இந்தியில் திலீப்குமாரின் நடிப்பில் உரன் கடோலா என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும் முகமது ரஃபியுடன் இணைந்து லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். இதேபடம், பின்னர் தமிழில் வான ரதம் என்ற பெயரில் அந்த காலத்திலே டப் செய்யப்பட்டு ரிலீசானது. அந்த படத்தில் இடம்பெற்ற கம்பதாசன் எழுதிய எந்தன் கண்ணாளன் என்ற பாடலை லதா மங்கேஷ்கர் மீண்டும் தமிழில் பாடினார். இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைப்பாளர் நவ்ஷத் என்பவர் இசையமைத்திருந்தார்.
பின்னர் இந்தியில் மட்டும் தனது குரலால் அரசாட்சி செய்துகொண்டிருந்த லதா மங்கேஷ்கரை மீண்டும் தமிழில் அழைத்து வந்த பெருமை இசைராஜா இளையராஜாவையே சேரும். அவரது இசையில் 1987ம் ஆண்டு வெளியான “ஆனந்த்” என்ற படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு “ஆராரோ ஆராரோ” என்ற பாடலை பாடினார். நேரடி தமிழ் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய முதல் தமிழ் பாடல் இதுவே ஆகும்.