தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் காட்டு பன்றிகளால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முப்போகம் விளைவிக்கும் விவசாயி
வானம் பார்த்து ஏறு பூட்டி விதை விதைத்து, முப்போகம் விளைச்சல் கண்டு ஊருக்கெல்லாம் உணவிடும் விவசாயி என்று தலை நிமிர்ந்து நடந்து சென்றான் என விவசாயியின் பெருமையை உரக்க சொல்வோம். இயற்கை கொடுக்கும் இடர்பாடுகளையும் தாண்டி தன் பை நிரம்புகிறதா என்று பார்க்காமல் மக்களின் வயிறு நிரம்ப, கொளுத்தும் சாலையில் செருப்பின்றி நடந்து சாணி எருவடித்து காணியை சீர் செய்து, களை பிடுங்கி, நீர் பாய்ச்சி முத்து, முத்தாய் நெல் வளர்ந்திருக்க கண்டு வாடிய வயிற்றிலும் முகம் மலர்பவரே விவசாயி. இதுதான் விவசாயியின் உண்மையான பெருமை.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற பெருமையை உடைய தஞ்சையில் குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை சாகுபடி என்று நெல்தான் பிரதானப்பயிராக உள்ளது. மேலும் கோடையில் நெல் சாகுபடி நடப்பதும். வழக்கம். இதேபோல் உளுந்து, பயறு, எள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பாபநாசம் வட்டாரங்களில் நெல், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட கோடை சாகுபடி நடந்து வருகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிர் பஞ்சு எடுக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
காட்டுப்பன்றிகளால் பருத்தி செடிகள் பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் அனைத்து வட்டாரங்களிலும் பருத்தி சாகுபடி செய்து உள்ளனர். தற்போது பருத்தியில் இருந்து பஞ்சு எடுக்கும் நிலை உள்ளது. பாபநாசம், மெலட்டூர், கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம், புத்தூர், அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டுப்பன்றி அட்டகாசம் பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் பருத்தி செடிகளை முறித்து கடித்து சேதப்படுத்தி வருகிறது.
பருத்தி சாகுபடி விவசாயிகள் பாதிப்பு
இதனால் கடன் வாங்கி பயிர் செய்த பருத்தி சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வேதனையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பருத்தி விவசாயிகள் நலன் கருதி காட்டு பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்தி பருத்தி செடிகளை பாதுகாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பருத்தி சாகுபடிக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.