தஞ்சாவூர்: மஞ்சள் தேமல் நோய் பாதிக்கப்பட்ட வயல்களில் உளுந்து பயிரை அகற்றிவிட்டு வேறு சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் சுஜாதா அறிவுறுத்தி உள்ளார்.


முப்போகம் சாகுபடி நடக்கும்


தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்த பின்னர் பல விவசாயிகள் உளுந்து சாகுபடி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில் உளுந்து, எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு
 
புரதச்சத்து மிகுந்த உளுந்து, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் பயிராக உள்ளது. இதனால் அதிக விவசாயிகள் உளுந்து சாகுபடியை மேற்கொள்கின்றனர். தற்போது தஞ்சை மாவட்டத்தில் உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுகுறித்து தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுஜாதா தெரிவித்துள்ளதாவது:  தஞ்சை மாவட்டத்தில் பரவலாக சித்திரை பட்ட உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடும் கோடை வெப்பத்தின் போது வளர்ச்சி பருவத்தில் இருந்த உளுந்தில் வெள்ளை தத்துப் பூச்சியின் பெருக்கம் காரணமாக மஞ்சள் தேமல் நோய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தினால் வெள்ளை தத்துப்பூச்சியின் பெருக்கம் அதிகளவு ஏற்பட்டது.




தத்துப்பூச்சிகளால் பரவும் மஞ்சள் தேமல் நோய்


மஞ்சள் தேமல் நோயானது ஒரு வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் எதன் மூலமும் பரவ முடியாது. ஆனால் வெள்ளை தத்துப்பூச்சி ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு சாறு உறிஞ்சும்போது அந்த பூச்சிகளின் வழியாக இந்த மஞ்சள் தேமல் நோய் உண்டாக்கும் வைரஸ் பரவுகிறது. சித்திரை பட்டத்தில் சித்திரை 1ம் தேதிக்கு பிறகு விதைப்பு செய்திருந்த வயல்களில் இந்த நோய் மற்றும் பூச்சியின் தாக்குதல் குறைவாகவே உள்ளது.


பருவநிலை மாறுபாடு


ஆனால் பங்குனி மாதத்தில் விதைப்பு செய்த உளுந்து பயிரானது 50 நாள் வயதுள்ளவை, தற்போது மஞ்சள் தேமல் நோயினால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளன. சித்திரை மாதத்தில் விதைப்பு செய்த உளுந்து பயிரானது தற்போது 30 நாள் வயதுள்ள பயிராக உள்ளது. இவற்றில் மஞ்சள் தேமல் நோயின் பாதிப்பு குறைவாகவே தென்படுகிறது. எனவே பருவநிலை மாறுபாடான கடும் கோடை வெப்பம் மற்றும் கோடை மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளை தத்துப் பூச்சியின் பெருக்கத்தினால் மஞ்சள் தேமல் நோய் அதிகளவு பாதித்துள்ளது.


உளுந்து பயிரை அப்புறப்படுத்த வேண்டும்


எனவே விவசாயிகள் அதிக அளவு பாதிப்படைந்த வயல்களில் உளுந்து பயிரை அப்புறப்படுத்தி விட்டு வேறு பயிர் சாகுபடிக்கு செல்ல வேண்டும். குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும் இமிடா குளோபிரிட் பூச்சிக் கொல்லி மருந்தினை பத்து நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.