30 கேட்ட தேமுதிக.. 20க்கு ஓகே சொன்ன அதிமுக
அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாகி உள்ளது. கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு வெளியானது.
இந்தநிலையில் இன்னொரு கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள வீட்டுக்கு சென்று விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்து பேசினர். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்தனர்.
அப்போது தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்காக கள்ளக்குறிச்சி சென்று இருந்தார். அ.தி.மு.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதை தொடர்ந்து பிரேமலதா நேற்று இரவு சென்னை திரும்பி உள்ளார். இன்று அவர் அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இணையான இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 15 முதல் 20 இடங்கள் வரை ஒதுக்க அ.தி.மு.க. தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே இன்று மாலை பேச்சு நடத்தப்பட உள்ளது. இதில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது இறுதி செய்யப்பட உள்ளது.
தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதி என்பது இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. தலைவர்கள் கையெழுத்து போட உள்ளனர். இதன் பின்னர் தே.மு.தி.க எத்தனை இடங்களில் போட்டியிட உள்ளது என்பது பற்றிய விவரங்களை அ.தி.மு.க., தே.மு.தி.க. தலைவர்கள் கூட்டாக அறிவிக்க உள்ளனர்.