தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் கேரளா போன்று இயற்கை எழில் மிகுந்த இடம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா. நம்பித்தான் ஆக வேண்டும். தற்போது இளைஞர்களின் பிக்னிக் ஸ்பாட் ஆக இது மாறி வருகிறது. தஞ்சை நகர் பகுதியை சேர்ந்தவர்களும் இப்பகுதிக்கு குடும்பத்தினருடன் தங்கள் விடுமுறை நாளை இன்பமாக போக்க இங்கு பயணம் செய்கின்றனர். எங்கு தெரியுங்களா?

தஞ்சாவூர் புறவழிச்சாலையல் இருந்து கல்லணைக்கால்வாய் ஆற்று பாலம் பிரிந்து வெட்டிக்காடுக்கு செல்லும் சாலையில் உள்ளது நெய்வாசல் தென்பாதி வாய்க்கால். அதன் அருகே ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் வடசேரி வாய்க்கால் அங்கிருந்து 2 கிமீ தொலைவில் கண்டிதம்பட்டு பகுதியில் கல்யாண ஓடை பிரியும் தலைப்பு பகுதி அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் இந்த இடங்கள் அமைந்துள்ளன. இதுதான் நம்ம ஊரு ஸ்பெஷல் கேரளாப்பா என்று இளைஞர்கள் தங்களின் விடுமுறை தினத்தை இங்கு வந்து கழிக்கின்றனர்.





கேரளாவை நினைவுப்படுத்தும் இயற்கை எழில் கொஞ்சும் கண்டிதம்பட்டு கல்யாண ஓடை பிரியும் பகுதிதான் அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது. இந்த இரண்டு இடங்களுக்கும் தான் மக்கள் படையெடுத்து வருகின்றனர். நெய்வாசல் வாய்க்கால்களில் குளித்து மகிழ்ந்து, பொழுதை கழிக்கிறார்கள். தஞ்சாவூர் என்றாலே கோயில்களும், கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு வயல்வெளிகளும், ஆறுகளும் நிறைந்து காணப்படுகிறது,

அந்த வகையில் நெய்வாசல் மற்றும் கண்டிதம்பட்டு தஞ்சை நகரத்தின்‌ மிக அருகில் உள்ள கிராம பகுதிகளாகும். இப்பகுதிகளுக்கு கிராமப்புற மக்கள் மட்டுமின்றி நகரத்திலும் தற்போது அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். காரணம் வயல் சூழ்ந்து நடுவில் ஆறு செல்வது கண்ணுக்கு குளிர்ச்சியான ரம்மியமான காட்சியாக உள்ளது.  வெளியூர் வாசிகள் இதனை பார்க்கும்போது  செமப்பா... கேரளா இயற்கை காட்சிகள் போல் இருக்கே என்று வியக்கின்றனர்.





தஞ்சை நகர் பகுதியை சேர்ந்த மக்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்த இந்த அழகான சூழலை ரசித்து செல்வதால் இது சிறிய‌ சுற்றுலா தலமாக மாறி விட்டது. தடுப்பணையில் குளித்து மகிழும் இளைஞர்களுக்கு இது கேரளா சென்ற பீல் ஆகிறது. அதிக செலவும் இல்லை. இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. சுற்றிலும் மரங்கள் நிறைந்து ஆஹா அற்புதம் என்று மனதை துள்ளாட்டம் போட வைக்கிறது. இந்த வாய்க்காலில் குளிப்பவர்கள் ஆனந்தம்... பேரானந்தம் என்று நினைக்கின்றனர். ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் காலத்திலும், மழை தண்ணீர் அதிகளவு வரும் நேரத்திலும் இங்கு ஆனந்த குளியல் போடலாம். மற்ற நாட்களில் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை சிலுசிலுவென்று ஓடும் தண்ணீரின் அழகுடன் ரசிக்கலாம். சுற்றிப்பார்க்க சொர்க்கலோகம் நம்ம ஊருலேயே இருக்குப்பா என்று இங்கு வந்து செல்பவர்கள் மனசு ரிலாக்ஸ் ஆகி சொல்கிறார்கள். அட நீங்க எங்க புறப்பட்டுட்டீங்க..!