தஞ்சாவூர்: ஆண்டுகள் உருண்டோடினாலும் நல்ல மெய்க்க விநாயகர் கோயிலின் பழமை மாறாமல் அப்படியே பாதுகாத்து வருகின்றனர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரி மக்கள்.

நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். முழு முதற் கடவுள். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம் உயிரோடு கலந்து உறவாடும் தெய்வம் பிள்ளையார்.

எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று அனைத்தும் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு பிள்ளையாருக்கு உண்டு.

விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

இத்தகைய பெருமைகள் கொண்ட விநாயகருக்கு பழமை மாறாமல் ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் வடசேரியில் ஓடுகள் வேயப்பட்ட வீடு போன்ற அமைப்பில் கோயில் இருக்கிறது. வடசேரியை சேர்ந்த பொதுமக்களின் வீடுகளில் நடக்கும் அனைத்து விசேஷங்களும் இக்கோயில் இருந்துதான் தொடங்கப்படும். எங்களின் மூத்தவர் இவர்தான் என்று பெருமையுடன் சொல்கின்றனர் வடசேரி மக்கள்.





திருமணம், காது குத்து நிகழ்ச்சி, குழந்தைக்கு பெயர் சூட்டுதல் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இங்கிருந்துதான் சீர்வரிசை எடுத்துச் செல்லுதல். திருமண முடிந்து மணமக்கள் இங்கு வந்து விநாயகரை வணங்கி விட்டுதான் செல்கின்றனர். பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார் நல்ல மெய்க்க விநாயகர்.

திருமண தடைகள் அகலுதல், குழந்தை வரம், குடும்ப ஒற்றுமை என்று அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருகிறார். இதனால் நல்ல மெய்க்க விநாயகரை வேண்டிய பின்னே அனைத்தும் நடத்துகின்றனர். வடசேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில்தான் விசேஷங்கள் எது நடக்க இருந்தாலும் அமர்ந்து பேசி முடிவெடுக்கின்றனர். சீர் வரிசை கொடுத்தல், திருமண அழைப்பு என்று இக்கோயிலில் இருந்தே நடக்கிறது.

திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டியவர்களின் வேண்டுதல் நிறைவேறிய உடன் இங்கு வந்து விநாயகரை தரிசித்து செல்வதும் தொடர்ந்து நடக்கிறது. வடசேரி மக்களின் கண்கண்ட தெய்வமாக நல்ல மெய்க்க விநாயகர் விளங்குகிறார் என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எத்தனை விஷயங்கள் மாறினாலும் இக்கோயில் அமைப்பை மாற்ற மாட்டோம். அருகில் உள்ள பல கிராமங்களின் கோயில் கட்டுமானங்கள் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் வடசேரி நல்ல மெய்க்க விநாயகரின் கோயில் இப்படி தான் இருக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். தலை குனிந்துதான் இக்கோயிலுக்குள் செல்ல வேண்டும். இது விநாயகருக்கு நாம் அளிக்கும் மரியாதை. இக்கோயிலில் சற்று நேரம் அமர்ந்தால் தாலாட்டும் காற்றும் ஜில்லென்ற தரையும் நம்மை அறியாமல் மனக்கவலைகள் அனைத்தையும் போக்கி விடுகிறது. விநாயகர் சதுர்த்தி உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.