தஞ்சாவூர்: தஞ்சை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சரஸ்வதி மகால் நூலகம். தஞ்சாவூரின் தனி அடையாளம் என்று சொன்னாலும் மிகையில்லை. சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும், அறிவுக் களஞ்சியத்துக்கு சரஸ்வதி மகால் நூலகமும் இன்றும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக உள்ளன. இதன் பெருமைக்கு உதாரணம் இங்குள்ள ஓலைச்சுவடிகள்தான். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, இந்தி என 49 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. 23,169 காகிதச் சுவடிகள், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப்பட்ட 3 லட்சம் மராத்தி எழுத்தான மோடி எழுத்து ஆவணங்களும் உள்ளன. அரிய வகை மூலிகைகள், மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய ஆச்சர்யமான குறிப்புகளும் உள்ளன. மருத்துவம் தொடர்பாகவும் சிகிச்சை தொடர்பாகவும் வியக்கவைக்கும் குறிப்புகள் இதில் அடங்கி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அனுமதி பெற்று இங்கு வந்து ஓலைச்சுவடி மற்றும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும் முறை கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது. இதேபோல், காகிதச் சுவடிகளும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றாகவும் உலகில் முதன்மையானதாகவும் விளங்கி வருகிறது சரஸ்வதி மகால் நூலகம்.
Thanjavur: தஞ்சாவூரின் தனி அடையாளம்... அறிவு பொக்கிஷமாக திகழும் சரஸ்வதி மகால் நூலகம்
என்.நாகராஜன் | 27 Feb 2023 06:28 PM (IST)
Thanjavur Saraswathi Mahal Library: சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றைக்கும் மக்களுக்குத் தேவையான குறிப்புகளைக் காலம் கடந்தும் வழங்கி வருகிறது இந்த நூலகம்.
சரஸ்வதி மகால் நூலக முகப்புத் தோற்றம்
Published at: 27 Feb 2023 06:28 PM (IST)