நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா செல்ல வேண்டுமென்று முடிவு எடுத்தால் அதில் பச்சை பசேலென இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை முக்கிய இடம் பிடிக்கும். மழையை ஈர்க்க காத்திருக்கும் மரங்களின் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆரம்பத்தில் அகன்று பரந்து விரிந்து கிடக்கும் மணிமுத்தாறு அணை பார்க்கும்போதே பிரம்மாண்டமாக இருக்கும். அணையில் ஒருபுறத்தில் வனத்துறை சோதனைச் சாவடி இருக்கும். இந்த சோதனைச் சாவடி வழியாக மாஞ்சோலைக்கு காரில் பயணிக்கலாம். பைக்குகளுக்கு அனுமதி கிடையாது. மாஞ்சோலைக்கு அரசு பேருந்து சேவை உண்டு. ஆனால் அங்கு வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே அரசு பேருந்தில் பயணிக்க முடியும். சோதனைச் சாவடியில் இருந்து 6 கிலோ மீட்டர் பயணித்தால் முதலில் தென்படுவது ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவி. உயரம் குற்றாலம் போல் இல்லை என்றாலும், இந்த மலைஅருவியில் குளிக்கும்போது உற்சாகத்திற்கு கொஞ்சமும் குறைவிருக்காது. மலைப் பாறைகளின் நடுவே உருகி கொட்டும் பாதரசம் போல விழும் அந்த நீர்வீழ்ச்சியை காண்பவர்கள் யாரும் குளிக்காமல் எளிதில் கடந்து செல்ல முடியாது. குடும்பத்துடன் பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற இடம். பெண்கள் உடை மாற்ற வசதியாக அறைகள் உள்ளது.




அருவியில் குளித்து விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினால், வழி எங்கும் இருபுறமும் அடர்த்தியாக மரங்கள் வளர்ந்து நிற்கும். அடர்த்தி குறைவான இடத்தில் சூரிய வெளிச்சம் தெரியும். மரங்களின் அடர்த்தி அதிகமான இடத்தில்,  பகலிலும் இருள் கவ்விய சாலையாக தெரியும். இப்படி இருளும், வெளிச்சமும் கலந்த மலைப்பாதையில் வளைவுகள் அதிகமாக இருக்கும். ஊரடங்கில் வெறிச்சோடிய சாலைகள் போல செல்லும் இந்த மலைப்பாதைகளில், காட்டு மரங்களில் வாழும் பல வகை பறவைகளின் குரல்கள் மட்டுமே நமக்கு துணையாக உற்சாகமூட்டிக் கொண்டு வரும். நகரப் பகுதிக்குள் கோடை வெயில் 100 டிகிரி தாண்டி சுட்டெரிக்கும் அதே வேளையில், மாஞ்சோலை நோக்கி பயணிக்கும் நம் மீது மெதுவாக குளிர்காற்று தொடும்போது உணரமுடியும் நாம் மாஞ்சோலை நெருங்கிவிட்டோம் என்று !




தமிழகத்தில் முதல் புலிகள் காப்பகமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. மாஞ்சோலை, புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் இருப்பதால் செல்லும் வழியில், எந்த இடத்திலும் விலங்குகளை நாம் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக மான், மிளா, காட்டு பன்றிகள் சில நேரங்களில் யானைகள் மற்றும்  காட்டெருமைகள் கூட எளிதில் காண முடியும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மாஞ்சோலை வந்தடைந்த பிறகு, குளிர் மட்டுமே அந்த இடத்தின் சீதோசன அடையாளமாக மாறி விடும். காணும் இடமெல்லாம் தேயிலைத் தோட்டங்கள் பாத்தி கட்டி இடம் விட்டு இடம் வரிசைப்படுத்தி வளர்ந்திருக்கும். மாஞ்சோலை பகுதியை நூறு ஆண்டுகள் குத்தகைக்கு  ஆங்கிலேயர் காலத்தில் எடுத்த ஒரு தனியார் நிறுவனம் இன்னும் இந்த தேயிலை உற்பத்தியையும், விற்பனையையும் நடத்திக்கொண்டிருக்கிறது. மாஞ்சோலைக்குள் உள்ளே நுழைந்ததும் முதலில் வனதுர்க்கை கோவில் உள்ளது. கோவிலை அடுத்து ஆங்காங்கே கருங்கற்களை கொண்டு எழுப்பிய சுவர்கள், மேலே தகரத்தை கொண்டு கூரை என அழகழகாய் சிறு வீடுகளின் தொகுப்புகள் பச்சை மரங்களுக்கு இடையே பேரழகாய் அடுக்கி வைத்தது போல் அமைந்திருக்கும். மாஞ்சோலையில் சிறிய உணவகம் இருக்கிறது. ஆனால் முன்கூட்டியே நாம் தெரியப்படுத்தி விட்டால், நமக்கும் அங்கு உணவு தயாராக செய்து வைத்திருப்பார்கள் 




தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தேயிலை தோட்டங்களில் இலைகளை பறித்து கொண்டு இருப்பதைப் பார்க்க முடியும். மாஞ்சோலையில் தேயிலை தோட்டத்தை பார்த்துவிட்டு, நாலு கிலோ மீட்டர் பயணித்தால் காக்காச்சி என்ற கிராமம் வரும்.  அங்கேயும் தேயிலைத் தோட்டம் உள்ளது. வெள்ளையர்கள் காலத்தில் விளையாடிய மிகப்பெரிய கோல்ஃப் கிரவுண்ட் அங்கு உள்ளது. நீண்ட பரந்த புல்வெளியில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும், கொண்டு வந்த உணவை உண்ணவும் சரியான இடமாக இது அமைந்துள்ளது. கீழே அமர்ந்து மேலே பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலையும், அதனை தொட்டு செல்லும் மேக கூட்டங்களும், அவ்வப்போது தலைகாட்டும் சூரிய ஒளியும் அந்த இடத்தின் அழகை மேலும் பல மடங்கு உயர்த்தி காண்பிக்கும்.




காக்காச்சியில் இருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் நாலுமுக்கு பகுதி வரும். இதுவும் சுற்றுலா பகுதிகளில் ஒன்று. ஆங்காங்கே பாதை வளைவுகளில் சரிந்து நீண்டு கிடக்கும் தேயிலைத் தோட்டங்களில் நின்று குடும்பங்கள், குடும்பங்களாக வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். சூழ்ந்திருக்கும்  பனிப்புகை நடுவே பச்சை நிற போர்வையை கீழே சரிவாக விரித்தது போல காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்கள் அங்குள்ள அமைதியின் ரம்மியத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் இருக்கும். நாலுமுக்கு பகுதிக்கு சிறு தொலைவில் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதி வருகிறது. அந்த வனப்பகுதிக்குள் தான் கோதையாறு அணை அமைந்துள்ளது. இதனை பார்ப்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையில் தனியாக அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது.




நாலுமுக்கு மலை கிராமத்தை தாண்டி மேலே சென்றால் ஊத்து என்ற மலை கிராமம் வரும்.  அதற்கு மேலே குதிரைவெட்டி என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து மணிமுத்தாறு அணை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அணையையும் பார்க்கமுடியும். குதிரைவெட்டி பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் 3  தங்குமிடங்கள் உள்ளது.  இங்கு தங்குவதற்கு ஆன்லைனில் www.Kmtr.co.in பதிவு செய்ய வேண்டும். இதற்காக  நாளொன்றுக்கு ₹3000 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. ஒரு அறையில் 3 பேர் வரை தங்கி கொள்ளலாம்.




திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. கல்லிடைக்குறிச்சி ஊரிலிருந்து மணிமுத்தாறு பேரூராட்சி 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தங்கும் வசதிகள் உள்ளது. மாஞ்சோலைக்கு சுற்றிப்பார்க்க காலையில் சென்று விட்டு மாலையில் திரும்புவதாக இருந்தால்,  இந்த பேரூராட்சியில் 300 ரூபாய் வாடகைக்கு அறைகள் உள்ளது. 600 ரூபாய் கட்டணத்தில் குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளும் உள்ளது. இந்த தங்குமிடம் மேலும் எதிரேயே சைவ உணவகங்கள் உள்ளது. மணிமுத்தாறு பேரூராட்சியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வனத்துறை சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் இருந்து நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வனப்பகுதிக்குள் சென்று வர அனுமதி உள்ளது. நமது சொந்த காரில் மாஞ்சோலை சென்று சுற்றிப்பார்த்து வருவதற்கு கட்டணமாக 950 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காரில் செல்லும் நபர்களுக்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.




வனத்துறை சார்பில் இரண்டு வாகனங்கள் மாஞ்சோலை மற்றும் காக்காச்சி கோல்ஃப் மைதானம் வரை சென்று சுற்றிப்பார்த்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்றுவர நபர் ஒருவருக்கு 350 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறை சோதனைச் சாவடி  வழியாக மேலே 6  கிலோமீட்டர் பயணித்தால் மணிமுத்தாறு அருவி வரும். அருவியில் குளித்துவிட்டு அங்கிருந்து 14 கிலோமீட்டர் பயணித்தால் மாஞ்சோலை அடையலாம். மாஞ்சோலையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குதிரைவெட்டி உள்ளது. அங்கு வனத்துறையின் தங்குமிடம் உள்ளது. செல்லும் வழியில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற மலை கிராமங்கள் உள்ளது.