தஞ்சாவூர்: சுற்றுலா போகணும் என்று முடிவு செய்பவர்கள் பட்டியல் போட்டா... தஞ்சைக்கு தனியிடம் இருக்கும். இப்படி தஞ்சைக்கு வருபவர்கள் மாலை நேரத்தில் தங்களை சற்றே ஓய்வுப்படுத்திக் கொள்ள சிறந்த இடமாக தொல்காப்பியர் சதுக்கம் உள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் விளங்குகிறது. உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவில், அசரடிக்கும் அரண்மனை, ஓலைச்சுவடிகள் நிரம்பிய சரஸ்வதி மஹால் நூலகம், சுவாமிமலை. தாராசுரம் கோயில்கள், கும்பகோணம் மகாமக குளம், கல்லணை, மனோரா என்று இவை எல்லாம் நிச்சயம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும்.

அப்படிப்பட்ட பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றுதான் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம். 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்த்து. அப்போது தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்படி மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பியர் சதுக்கம். தஞ்சையிலிருந்து நாகை -பட்டுக்கோட்டை சாலைகள் பிரியும் சந்திப்பில் 5 அடுக்கு கோபுரம் அமைப்பாக தமிழ் மொழிக்கு தொன்மையான இலக்கணம் படைத்த “தொல்காப்பியர் நினைவு கோபுரம்” அமைக்கப்பட்டது.



இந்த இடம் “தொல்காப்பியர் சதுக்கம்” என பெயரிடப்பட்டது.. ரூ.75 லட்சம் மதிப்பில் இந்த தொல்காப்பியர் சதுக்கத்தில் பூங்காவுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு மக்களுக்கு மாலைநேரத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் இடமானது.

இந்த பூங்காவில் செயற்கை நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் சறுக்கி விளையாடுவதற்கு இடம் என பார்த்து பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளம் வரை செல்ல படிக்கட்டுகளும் உண்டு. 5வது தளத்தில் நின்று பார்த்தால் தஞ்சை நகரின் அழகை பார்த்து ரசிக்க முடியும்.

தஞ்சைக்கு சுற்றுலா வருபவர்கள் பார்த்து ரசித்து, மாலைநேரத்தை இனிமையுடன் கழிக்க சிறந்த இடங்களில் தொல்காப்பியர் சதுக்கமும் ஒன்று. உங்களோட சுற்றி பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இதையும் சேர்த்துக்கோங்க. தஞ்சைக்கு வாங்க... விடுமுறையை இனிமையாக, மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் அனுபவிங்க. மனசை கிறங்கடிக்கும் சுற்றுலா இடங்கள், கட்டிடக்கலையின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் கோயில்கள் என்று ரசித்து, மனம் நெகிழ்ந்து போக செய்யும் இடமாக தஞ்சை விளங்குகிறது.

தஞ்சையை சுற்றிப்பார்க்க பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லை பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். கோடை காலம், விடுமுறை தினங்களில் தஞ்சை சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழியும் என்றால் மிகையில்லை.

முக்கியமாக அரண்மனை, தஞ்சை பெரிய கோயில் ஆகியவற்றை பார்த்து விட்டு சற்றே ஓய்வெடுக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொல்காப்பியர் சதுக்கம் சரியான இடமாக அமையும். குடும்பத்தினருடன் வந்து மாலை நேரத்தில் ஆனந்தமாகவும், ஓய்வாகவும் இந்த தொல்காப்பியர் சதுக்கத்தில் அமர்ந்து உரசிச் செல்லும் காற்றை மனம் நிரம்ப அனுபவித்து செல்லாம். அப்போ கோடை சுற்றுலாப்பயணமாக வந்தா நீங்களும் தொல்காப்பியர் சதுக்கத்தை பாருங்கள்.