தஞ்சாவூர்: இன்றைய காலக்கட்டத்தில் உலகமே எதிர்நோக்கியுள்ள பெரிய பிரச்சினை உலக வெப்பமயமாதல்தான். இதை தடுக்க மரங்கள் வளர்ப்பே சரியான வழிமுறை என்று அனைவரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் மரங்கள் சரணாலயமும், ஒருங்கிணைந்த பண்ணையமும் இணைந்து செய்யப்படுகிறது. அதுமட்டுமா. இதை அரசே செயல்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை பார்க்க அனைவரும் வந்து செல்கின்றனர். அதுமட்டுமா முக்கியமாக மாணவ, மாணவிகளின் வருகை அதிகம் உள்ளது. சரிங்க இதெல்லாம் எங்கு? தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருமலைசமுத்திரத்தில்தான் இந்த மரங்கள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் மரங்கள் சரணாலயம் அமைத்து பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் பெயர் விருட்ச வனம்.
சரி மரங்கள் சரணாலயம் என்றால் என்ன இருக்கும். என்ன இல்லை என்பதுதான் கேள்வியே. திருமலைசமுத்திரத்தில் அரசுக்கு சொந்தமான 6.50 ஏக்கரில் பாரம்பரிய, அரிய வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் விருட்ச வனம் உருவாக்கப்பட்டது.
இதில் திருவோடு, இத்தி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, மாவிலங்கை, ருத்ராட்சம் என 216 வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதுபோன்று அரிய வகை மரக்கன்றுகளை வளர்த்து பராமரித்து மண் வளத்தையும் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரிய வகை மாவிலங்கை மரத்திற்கு வில்வபத்திரி, வரணி, மாவிலங்கம், மாவிலங்கு, மாவிலங்கை, மகாவிலங்கமரம், அதிசரணம், மரலிங்கம், மாவிப்பட்டை, மாவிட்டை, மாவிளக்கப்பட்டை என்னும் பெயர்களும் உண்டு. இதன் கிளைகள் ஒழுங்கற்று வளரும். மரப்பட்டை சாம்பல் நிறத்திலும் வழவழப்பாகவும் இருக்கும். இலை விரல்கள் போன்ற மூன்று கூட்டிலை அமைப்பைக் கொண்டிருக்கும்.
இம்மரம் வலிமையற்றது. எனவே இதைத் தீக்குச்சி, சீப்பு செய்யப் பயன்படுத்தலாம். மரம் பளபளப்பான மஞ்சள் கலந்த வெள்ளை நிறமானது. இம்மரத்தின் இலைகளைக் கால் நடைகளுக்குத் தரலாம். மாவிலங்க மரத்தின் இலை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவத்திற்கு உதவும்,
இப்படி அரிய வகை மரங்கள் இங்கு வேகமாக வளர்ந்து வருகின்றன. இது மட்டுமில்லைங்க... இந்த மரங்கள் சரணாலயத்தில் பன்முகத் தன்மையாக புங்கனூர் பசுக்கள் மற்றும் காளை வளர்க்கப்படுகிறது. உலகத்திலேயே சிறிய ரகமான மலேசியன் சராமா கோழி மற்றும் பெரிய கோழியான கொலோடி பிராமஸ் இனங்கள் வளர்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் மீன் பண்ணை, காய்கறி தோட்டம் என்று அருமையான பராமரிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் காளான் உற்பத்தியும் மேற்கொள்ளப்படுகிறது.
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்த சரணாலயம் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு மினி தியேட்டர், படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் வகையில் பூங்கா, பார்க்கிங் வசதி போன்றவை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் இந்த சரணாலயம் தஞ்சை மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப்பயணிகளுக்கும் மிகவும் விருப்பமான இடமாகவும், பொழுதுபோக்குவதற்கும் பயன்பெறும் வகையிலும் மாறி விடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் அமைந்துள்ள விருட்சவனம்... மரங்களின் சரணாலயம்
என்.நாகராஜன்
Updated at:
24 Mar 2023 01:38 PM (IST)
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்த சரணாலயம் சுற்றுலா தலமாக விளங்குகிறது.
விருட்ச வனம்
NEXT
PREV
Published at:
24 Mar 2023 01:38 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -